நமக்கு உப்பு ஏன் அவசியம்?
நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான சுவையூட்டிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கியமான சுவையூட்டி உப்பு ஆகும். உப்பு நமது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கவும் பயன்படுகிறது. பண்டைய காலங்களில் உப்பானது தங்கம், வெள்ளி என்பவற்றுக்கு சமமாக மதிக்கப்ட்டுள்ளது. உப்பு பெரும்பாலும் கடல் நீரில் இருந்தே கிடைக்கிறது. உப்பு மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல உப்பும் நமது உடலில் அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை பற்றிய விரிவான விபரத்தை கீழே பார்க்கலாம்.
உப்பின் முக்கியத்துவம்
“உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல்படும் அனைத்து செல்களுக்கும் உப்பு அவசியமானது. தோல் மற்றும் எலும்புகளிலும் முக்கிய அங்கமாக உப்பு உள்ளது," என்கிறார் அவர்.
நமது உடலில் போதிய அளவு சோடியம் இல்லை என்றால் நாம் இறந்து விடவும் வாய்ப்புள்ளது. உடலில் சோடியம் குறைந்தால், குழப்பம், எரிச்சல் ஏற்படலாம், தசைகளின் உணர்திறன் குறையலாம், வாந்தி, வலிப்பு, கோமா ஏற்படலாம். இரண்டு கிராம் சோடியம் கொண்ட ஐந்து கிராம் உப்பை தினமும் எடுத்துக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது, கிட்டத்தட்ட ஒரு டீ ஸ்பூன் அளவிலான உப்பு ஆகும். ஆனால் உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் இருதய நோய்கள், வயிற்று புற்றுநோய், உடல் பருமன், எலும்பு தேய்மானம், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிக அளவிலான உப்பு எடுத்துக் கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் 18.9 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உப்பு உடலில் பித்தச்சாறு மற்றும் அலுவல் சுரப்பிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது உணவு செரிமானத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். பழமையான மருத்துவ முறைகளில் உப்பின் பங்கு அதிகமாகும். நமது முன்னோர்கள் பல நோய்களின் மருந்தாக உப்பு பயன்படுத்தி உள்ளனர். உப்பை பயன்படுத்தி உணவுகளை பதப்படுத்தி வைத்து நீண்ட காலம் பயன்படுத்தலாம். பண்டைய காலங்களில் வாழ்ந்த மக்கள் குளிர் காலத்திற்கு தேவையான உணவுகளை பாதுகாக்க உப்பிட்டு பதப்படுத்தும் முறை புழக்கத்தில் இருந்துள்ளது. இது உணவுகளில் உருவாகும் பக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. உடலின் இன்சுலின் செயற்பாட்டை பராமரிக்க ஓரளவுக்கு உப்பு உதவுகிறது. உப்பை கொண்டு பற்களில் உள்ள கறைகளையும் சுத்தம் செய்ய முடியும்.
உப்பை அதிகமாக உட்கொள்பவர்கள்
நிறைய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே, அதிகமான உப்பு உட்கொள்ளுதலுக்கு காரணமாக அமைகிறது. ஆனால், சில நேரங்களில் வரலாற்று காரணங்களும் இருக்கலாம். கசகஸ்தானில் இருக்கும் மக்கள் ஒரு நாளுக்கு 17 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். கசகஸ்தானின் மக்கள் சுகாதார நிறுவனத்தின் நிர்ணயத்தை விட அதிகளவான உப்பை எடுக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் பாரம்பரியம் என்கின்றனர் கசகஸ்தான் நாட்டு மக்கள். பல நூற்றாண்டுகளாக, அவர்கள் நிறைய இறைச்சியை சுமந்து கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அலைந்து கொண்டிருந்தனர். அந்த இறைச்சியை பதப்படுத்த உப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. குளிர்காலத்துக்கு தேவையான ஒரு முழு மாடு, ஆடு அல்லது பாதி குதிரையை கூட பதப்படுத்த வேண்டியிருக்கும். அதற்காக அவர்களுக்கு அதிகளவான உப்பு தேவைப்பட்டது.
அதிகளவான உப்பை உட்கொண்டால் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் என்பன ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் மூளையின் செயற்பாட்டையும் குறைக்கிறது. இது ஒழுங்கான தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. சக்கரை நோய் உள்ளவர்களும் அதிகளவான உப்பு சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் உப்பில் உள்ள சோடியம் சக்கரையின் சமநிலையை குழப்பிவிடும்.
உப்பு உடலினுள்ளே நுழைந்தால் என்ன செய்யும்?
நமது எண்ணங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு அடிப்படையான மின் சமிக்ஞைகளை உப்பு உடலில் செலுத்துகிறது. அதனால் நமது உடலும் மனமும் ஆற்றல் பெறுகின்றன. நாம் உப்பை உட்கொள்ளும் போது, நாக்கில் உள்ள சுவையணுக்கள் மற்றும் தொண்டையில் உள்ள தசைகளால் அவை அடையாளம் காணப்படுகின்றன. “உப்பு நம்முடைய உடல் மற்றும் மனதை மின்னாற்றல் பெறச் செய்கிறது” என்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின். உப்பில் உள்ள சோடியம் அயனிகள் எச்சிலில் கரைந்துவிடும். பிறகு இவை சுவையணுக்களில் நுழைந்து செல்களை இயக்கத் தொடங்கும். அவை ஒரு மின் பொறியை உண்டாக்கும்.
எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?
உப்பின் அளவு காரணமாக உடலில் ஏற்படும் துல்லியமான விளைவுகள், ஒவ்வொருவரது மரபணு அமைப்பை பொறுத்தது. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பின் அளவை குறைத்துக் கொண்டால், இதனை தடுக்கவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும். “அதிக அளவிலான உப்பை உட்கொள்ளும் போது, உங்கள் உடல் முதலில் செய்வது, அந்த உப்பை கரைப்பது. உங்கள் உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். எனவே, கூடுதலான திரவத்தைக் கையாளும் போது, உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்,” என்று விவரிக்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாசில் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் பேராசிரியர் கிளையர் காலின்ஸ்.
இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கலாம்.
உங்கள் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால், உதாரணமாக மூளையில், அவை வெடித்து, அதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும். பிரிட்டனில், ஒரு நாளில் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்பின் அளவு எட்டு கிராமாக குறைந்துள்ளது. எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இப்போதும் அதிகம். உப்பின் அளவை குறைக்க உணவு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், உட்கொள்ள பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும். சிறுநீர் பரிசோதனையில் உங்கள் உடலில் உப்பு அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்பது தெரிய வரும். நீங்கள் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கணித்துக் கொள்ள, உங்கள் உணவு உட்கொள்ளுதலை தொடர்ந்து பதிவு செய்து வரலாம், அல்லது உணவுப் பொருள்களின் லேபில்களைப் பார்த்து அதிலுள்ள சோடியம் அளவை கணக்கிடும் செயலியை பயன்படுத்தலாம். இரண்டுமே துல்லியமான முறைகள் அல்ல, எனினும் உப்பின் அளவை ஓரளவு கணித்துக் கொள்ள உதவும்.
உப்பை குறைத்துக் கொள்ளும் வழிகள்
நீங்கள் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் கூட, அதனை குறைப்பது எளிதானது அல்ல. அஸ்தானாவில், கசகஸ்தானின் தேசிய உணவான பெஸ்மார்க்கை சாப்பிடாமல் தவிர்க்க அந்த நாட்டு மக்கள் போராடுகின்றனர். அது பாஸ்தாவுடன் கூடிய வேக வைத்த இறைச்சியாகும். ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு நிபுணர்கள் வலியுறுத்துகிறார். நாங்கள் உணவு சமைக்கும் போது, உப்புக்கு பதிலாக மருத்துவ குணமுள்ள இலைகள், எலுமிச்சை சாறு, வினிகர் அல்லது மசாலா பொருட்கள் என்பவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment