ஹிட்லரின் எனது போராட்டம்
உலக சரித்திரத்தின் போக்கையே தன் பக்கம் திருப்பியவர், ஒரு இனத்தையே தனியொருவனாக நின்று அழித்துக் காட்டியவர், உலக வல்லரசுகள் பல எதிர்த்தபோதும் கூட தனது கொள்கைளில் இருந்து சிறிதும் நெறி தவறாது நின்றவர் அடோல்ப் ஹிட்லர். உலக நாடுகள் அனைத்தையும் ஒரு மகா யுத்தத்தில் கொண்டுவந்து நிறுத்திய ஹிட்லர் எதனை எதிர்பார்த்து இந்த யுத்தத்தை ஆரம்பித்தார்? அவரின் கொள்கைகள் தான் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கான பதிலை சொல்லும் புத்தகம் தான் மெயின் கேம்ப். இந்தப் புத்தகம் ஹிட்லரின் வரலாறை கூறவில்லை. இதில் அவரின் கொள்கைகள், ஜேர்மன் சோசலிசம், முதலாம் உலக யுத்தம் பற்றிய அவரின் கண்ணோட்டங்கள் போன்ற கருத்துக்களை கூறுகின்றன. மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் (mein kampf) எனது போராட்டம் அல்லது எனது யுத்தம் என்று பொருள்படும் தலைப்பில் தன் சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடோல்ப் ஹிட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுப்பு 1925 லும், இரண்டாம் தொகுப்பு 1926-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 1934 வரை இப்புத்தகத்தின் 2,40,000 பிரதிகள் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இப்புத்தகம் விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது. இப்புத்தகம் அந்தக் காலங்களில் ஜெர்மன் இராணுவத்தினருக்கும் புதுமண தம்பதியர்க்கும் இலவசமாக வழங்கப்பட்டது. ஹிட்லர் 1924 ஏப்ரல் 1 மியூனிக்கில் சிறைபிடிக்கப்பட்ட போது சிறையிலிருந்து எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இன்றளவும் அதன் விற்பனை குறையவில்லை.
ஹிட்லரின் இளமை காலம் பல துன்பங்களை நிறைந்ததாய் இருந்து வந்துள்ளது. வரலாற்றில் கொடுராமாக காட்டப்படும் ஹிட்லருக்குள்ளும் ஒரு ஈரம் இருக்கதான் செய்தது, இவருக்குள்ளும் தனது தாயின் மேல் அதீத பாசம் இருந்துள்ளது. இவருக்கு ஒரு காதலியும் இருந்துள்ளார். இறப்பதற்கு ஒரு தினம் முன்பு திருமணமும் செய்துகொண்டார். 13 வயதில் தந்தையையும், 15 வயதில் தாயையும் இழந்தார். ஹிட்லரை அரச அதிகாரியாக பார்க்கவேண்டுமென அவரின் தந்தை ஆசைப்பட்டார். ஆனால் ஹிட்லர் பெயின்டராக வரவிரும்பினார். ஹிட்லர் பள்ளிக்காலத்தில் அதிகளவான சரித்திர புத்தகங்களை படித்தார். இதுவே அவரை சிறந்த தேசபக்தனாக மாற்றியது. அத்துடன் அவரினுள் அரசியல் அறிவு வளரவும் காரணமாக அமைந்தது. ஜெர்மன் - ஆஸ்திரியா நாடுகளை இணைப்பதையே தனது ஆரம்ப கடமையாக கொண்டார். வியான்னா அரசியல் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் யூதர்கள் என்ற இனம் பற்றி கேள்விபட்டார். கேள்விபடும்போது தோன்றும் ஆத்திர உணர்வுகளை இதில் தெளிவாக கூறியுள்ளார். யூதர்கன் மீது இருந்தது சாதாரண கோவம் மட்டுமல்ல வெறியாகும். இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் யூதர்கள் மீது தான் கொண்ட வெறுப்பை காட்டியிருப்பார். யூதர்களை புழுவை விட கேவலமாக எண்ணினார் ஹிட்லர். ஹிட்லர் வியன்னாவில் இருந்தபோது அங்குள்ள பாராளுமன்றங்கள் மீதும் அவற்றின் செயற்பாடுகள் மீதும் அதிருப்தி கொண்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் கடமையை மறந்து வேற்று இனத்தவர்களுக்கு வேலை செய்வது, எதிரிகளை ஆதரிப்பது, சொந்த நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது என்பன ஹிட்லரை பாதித்தது. ஆஸ்திரியா மீது இருந்த வெறுப்பும் ஜெர்மனி மீது இருந்த காதலும் ஹிட்லரை ஜெர்மனிக்கு செல்ல தூண்டியது.
1912 இல் மியூனிக் நகருக்கு செல்கிறார் ஹிட்லர். இதில் ஜெர்மனிக்கும் தனக்குமான பந்தம் எவ்வாறு இருந்தது என்பதை கூறியிருப்பார். சர்வாதிகாரிக்குள்ளும் ஒரு கம்பன் இருப்பான் என்பதற்கு ஹிட்லர் ஒரு எடுத்துக்காட்டு. இவர் ஜெர்மனி வந்து சிறிது காலத்திலேயே முதலாவது உலக யுத்தம் ஆரம்பித்தது. இது ஹிட்லரின் அரசியல் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. யுத்த பிரகடனம் வந்தவுடன் ஹிடலர் பவேரிய படையில் இணைகிறார். யுத்த களங்களில் கறங்கு போல சுழன்று தனது வீரத்தை வெளிப்படுத்தினார். அங்கு நிலவும் போர்ச் சூழல்களும், அதை பிரசுரிக்கும் பத்திரிகைகளில் வரும் செய்திகளும் ஹிட்லரை ஆத்திரமடைய செய்கின்றன. அரசியலிலும் சரி, யுத்தத்திலும் சரி பிரச்சாரம் எனப்படும் கலை எவ்வளவு முக்கியமானது என்பதை கூறியிருக்கிறார். ஆனால் ஜெர்மனியின் பிரச்சாரமானது அவ்வளவு வலுவானதாக இருக்கவில்லை. அது மக்களை உற்சாகப்படுத்தவில்லை. ஆனால் ஜெர்மனியை எதிர்த்து போரிட்ட எதிரிநாடுகள் அதை சிறப்பாக செய்தன. இதற்கிடையில் எதிரிகளின் வாயு தாக்குதல்களுக்கு இலக்கானார் ஹிட்லர். இதனால் அவருடைய பார்வையை இழக்கும் நிலையே ஏற்பட்டது. அப்போது யாருக்கு தெரியும் தற்போது உயிருக்கு போராடும் வீரன் தான் பின்னாளில் ஒரு இனத்தையே கொன்றொழிக்க போகிறான் என்று.
உலக யுத்தத்திற்கு பின்னரே ஹிட்லரின் அரசியல் எழுச்சி ஆரம்பமானது. போரில் அடைந்த வீழ்ச்சி ஹிட்லரை பெருமளவில் பாதித்தது. இந்த அவமானகரமான தோல்விக்கு யூதர்களே காரணமென கருதினார். இரண்டாக சிதறி கிடக்கும் நாடுகளை ஒண்றினைப்பதன் மூலமே நாட்டை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என நம்பினார். உடனே அந்த பணியில் ஹிட்லர் இறங்கினார். சில கூட்டங்களை நடாத்தி தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தார். ஆரம்பமானது அரசியல் செயற்பாடுகள் மட்டுமல்ல அடுத்த பெரும் யுத்தத்திற்கான செயற்பாடுகளும் தான். இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் ஹிட்லர் உருவாக்கிய ஜெர்மன் தேசிய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை பற்றி விரிவாக கூறுகிறது. ஏற்கனவே இருந்த இயக்கங்கள் இவர்களை இல்லாது செய்ய முயன்றார்கள். ஹிட்லர் இதற்காக சிறப்பு படைபிரிவுகளை உருவாக்கினார். அவர்களுடைய கூட்டத்தில் யாரேனும் குழப்பத்தை விளைவித்தால் அவர்களை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த அந்த சிறப்புப் படை உதவியாக இருந்தது. அதை எதிர்த்து இவர்களால் எவ்வாறு வெளிவர முடிந்தது என்பதை கூறுகிறது இந்த அத்தியாயம். இதுவரை காலமும் உலகத்தை வென்றவர்கள் எல்லாம் சிறந்த பேச்சாளர்களே. எழுதப்படும் எழுத்தை விட பேசப்படும் வார்த்தைக்கு சக்தி அதிகம். ஹிட்லரும் அதையே தான் செய்தார். மாநாடுகளில் மணிக்காக நின்று பேசினார். அங்கு வந்த அனைவரும் அவருடைய பேச்சில் கட்டுண்டனர். இவருடைய பேச்சுத் திறமையே பின்னாளில் இவரை ஜெர்மனியின் அதிபராக உயர்த்தியது.
இந்த புத்தகம் ஹிட்லரின் வாழ்க்கை அனுபவத்தை மட்டும் சொல்லவில்லை. அது நமது வாழ்க்கையை சிறப்பாக்க கூடிய பல வழிமுறைகளை நமக்கு கூறுகிறது. ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது மனனம் செய்தல் அல்ல, அதில் உள்ளதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தல் என்பதாகும். ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் அவருடைய அடிப்படை சிந்தனைகள் சரியானதே. ஒரு நாட்டை அந்த நாட்டின் நாட்டு மக்களே ஆள வேண்டும். தனது தாய் நாடு இன்னொரு நாட்டிடம் அடிமையாய் இருக்க கூடாது போன்ற இவருடைய கொள்கைகள் சரியாக இருந்தாலும் இவர் சென்ற வழியே தவறானது. யூதர்கள் மேல் இவர் கொண்டிருந்த வன்மம் இந்த புத்தகம் முழுவதும் எதிரொலித்தது. இவருடைய பல சித்தாந்தங்கள் எம்முடைய அன்றாட வாழ்விலும் பயன்படகூடியது. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரை அகற்றிவிட்டு எவ்வாறு பாலை மட்டும் அருந்துமோ அதே போல ஹிட்லரின் மெயின் கேம்ப் இல் இருந்து எமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சாதாரண ஏழைச் சிறுவன் சர்வாதிகாரியாக மாறியதை இந்த புத்தகம் கூறுகிறது. நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமாகும். இது ஒரு அரசியல் களத்தில் வேரூன்றி அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வழிவகுக்கும்.
👍
ReplyDelete