குகேஸ்: இளம் சதுரங்க சாம்பியன்
கடந்த சில தினங்களாக நாம் அதிகம் கேள்விபட்ட பெயர்களில் ஒன்றுதான் குகேஸ். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.” இது சதுரங்க விளையாட்டில் மிகப்பெரும் வரலாற்றை படைத்துள்ள ஒருவருடைய வார்த்தைகள். சதுரங்க வீரர்களின் பொதுவான கனவாக இருப்பது ஒரு தடவையாவது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் அதை இளம் வயதிலேயே அடைந்து காட்டியுள்ளார் 18 வயதான குகேஸ், தமிழக வீரரான இவர், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, உலகில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சாம்பியன்ஸிப் போட்டியின் இளம் போட்டியாளராகத் தேர்வான அவர், தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் இளம் செஸ் வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். உலக சாம்பியன்ஸிப் பட்டத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, "எனக்குத் தெரியாது, நான் முதலில் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிலளித்தார் குகேஸ். இந்த மகத்தான சாதனைக்கு பின் அவரிடம் இருந்த அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் ஏராளம். அது பற்றிய சிறு தொகுப்பே இது.
பள்ளி நாட்களில்…
இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கிய பெயர்களில் ஒன்று குகேஸ். சென்னையை சேர்ந்த அவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார். பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஸ். வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஸ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார். தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஸை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர். அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஸின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர். வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஸின் பொழுதுபோக்காகவே ஆனது.
மருத்துவத்தை கைவிட்ட தந்தை
குகேஸின் தந்தை ரஜினிகாந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஸின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவ பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஸை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஸின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார். குகேஸின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வெற்றிகளின் ஆரம்பம்
கடந்த 2015 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஸனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஸிப் பட்டத்தை வென்றார் குகேஸ். 2015 ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஸை மிகவும் ஊக்கப்படுத்தியது. FIDE தரவரிசையில் குகேஸ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஸின் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.
இளம் இந்திய கிராண்ட் மாஸ்டர்
சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஸீக்கு இந்த கனவு, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது. அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஸ். ஆனால், சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார்.
குகேஸ் குவித்துள்ள பதக்கங்கள்
முதலில் உள்;ர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஸ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார். ஸ்பெயினில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது, அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016 ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஸிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021 ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.
குகேஸ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல், அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஸிப் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021 ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023 ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஸிப் பட்டம் பெற்றுள்ளார். போட்டிகளின் போதும் பேட்டிகளின் போதும் காணப்படும் குகேஸ் மிகவும் சாந்தமானவர். ஆடும் போது முகத்தில் எந்தவொரு பதட்டத்தையும் காட்டாதவர். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை” என்று சாம்பியன்ஸிப் போட்டிகளுக்கு இடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். பொதுவெளியில் காணப்படும் குகேஸீக்கு மற்றொரு முகம் இருக்கிறது என, குகேஸை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை உலக சாம்பியன்ஸிப் போட்டிக்கு குகேஸ் தேர்வான போது அவரது தந்தை ரஜினிகாந்த் பிபிசி தமிழிடம், பகிர்ந்திருந்தார்.
"வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஸ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்," என்று கூறிய அவரது தந்தை, "சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஸ் யாரிடமும் பேசமாட்டார்," என்றும் தெரிவித்தார். போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஸ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில் கூட யாரிடமும் பேசமாட்டேன். அது கூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார். “எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விடயங்கள் தெரியும். இப்போதும் கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஸீம் அவரது பயிற்சியாளரும் தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்," என்றார் அவர்.
மேலும், “போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அது கூட கிடைக்காது," என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஸீன் தந்தை. போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த். “போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ளமாட்டார்கள். ஆனால், போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும், போட்டியின் போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர்.
Comments
Post a Comment