உலகின் மிகச்சிறிய நாடுகள்
நாடு என்றால் அது பல்லின மக்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் என்றே நாம் பொதுவாக கருதுவோம். எனினும், மிகவும் சிறிய நிலப்பரப்பில் அமைந்த அரசுரிமை பெற்ற நாடுகளும் உலகில் உள்ளன. ஐரோப்பா, கரீபியன் தீவுகள் மற்றும் பசுபிக் பிராந்தியத்திலேயே இவ்வாறான நாடுகள் பெருபாலும் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை 400 சதுர கிலோமீற்றரிலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டவையாகும். அந்த வகையில், உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில், நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடுகளாக கருதப்படும் பத்து நாடுகள் பற்றிய விபரம் இங்கே பார்ப்போம்.
மால்ட்டா
மால்ட்டா இன் பரப்பளவு 316 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்த நாடு, பிரதானமாக கோஸோ, கொமினோ மற்றும் மால்ட்டா என்ற மூன்று தீவுகளை உள்ளடக்கியுள்ளது. மால்ட்டா தீவானது ஏனையவற்றை விட விசாலமானது. இது மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். இங்கு பிரதானமான மொழி மால்ட்டீஸ் ஆகும். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய வரலாற்றினைக் கொண்ட மால்ட்டா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு நாடாகும். இங்கு நிலவும் வெப்பமான காலநிலையும் அழகிய கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விடயங்களாக உள்ளன.
மாலைதீவு
இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுக் கூட்டங்களாலான மாலைதீவானது 298 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட நாடாகும். ஆசியாவின் பிரபல்யமான சுற்றுலா மையமாக மாலைதீவினைக் குறிப்பிடலாம். இது அளவிலும் சனத்தொகையிலும் ஆசியாவிலேயே சிறிய நாடாகக் கருதப்படுகின்றது. 1,192 தீவுகளை உள்ளடக்கிய ஒரு இராச்சியமே மாலைதீவு ஆகும். ஆனாலும் இதில் 200 தீவுகளில் மட்டுமே மனித குடியேற்றங்கள் காணப்படுகின்றன. உலகில் நெருக்கடி மிகுந்த நாடுகளின் பட்டியலில் மாலைதீவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. போர்த்துகேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்களின் காலனித்துவ நாடாக இருந்த மாலைதீவு, 1965 இல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திர அரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அழகிய கடற்கரைகளும் நீலப்பளிங்கு போன்று மிளிரும் கடலும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கக் காரணமாக உள்ளன. இன்று மாலைதீவுகளின் சில தீவுகள் காணமல் போயுள்ளன. இதற்கு காரணம் அதிகரித்து வரும் கடல் மட்ட உயர்வு தான்.
சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ்
கரீபியக் கடலில் செயின்ட் கிறிஸ்டோபர் நெவிஸ் என்ற இரு தீவுகளை முதன்மையாக கொண்ட நாடாகும். இதன் பரப்பளவு 261 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்ட ஆரம்பகால தீவுகளில் இந்த இரண்டு தீவுகளும் அடங்குகின்றன. அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடாகும். இங்கு அதிகளவில் ஆபிரிக்க இன மக்களே வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். சுற்றுலாத்துறை, விவசாயம் மற்றும் சிறு உற்பத்திகள் என்பன இந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்றன. சீனி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ஹோட்டல் தொழிற்துறைக்கு பிரதான இடம் வழங்கப்படுகின்றது.
மார்சல் தீவுகள்
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு தான் மார்சல். இதன் பரப்பளவு 181 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதன் தலைநகரம் மாசூரோ ஆகும். பிரதான மொழியாக மார்சல் மொழி காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறு தீவுகளையும் உள்ளடக்கியதாக, 29 பவளப்பாறைகளால் இணைக்கப்பட்ட ஒரு நாடே மார்சல் தீவுகள் ஆகும். இவற்றில் 24 தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர். மார்சல் தீவுகள் 1985 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. கைவினைப்பொருள் உற்பத்தி, கொப்பரை, மீன்பிடி நடவடிக்கை மற்றும் சுற்றுலாத்துறை என்பன நாட்டின் பிரதான கைத்தொழில்களாகும்.
லிக்கின்ஸ்டைன்
ஐரோப்பில் உள்ள ஒரு சிறிய நாடு லிக்கின்ஸ்டைன் ஆகும். இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். உயரமான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரே ஒரு நாடாக லிக்கின்ஸ்டைன் விளங்குகின்றது. 11 மாநகர சபைகளை கொண்ட இந்த நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும். இங்கு குளிர்கால விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெறுகிறது. சுவிற்சர்லாந்து மற்றும் ஒஸ்ட்ரியாவுக்கு இடையே அமைந்துள்ள இந்த நாடு, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். ஜேர்மன் மொழி பேசும் நாடாகும். இளவரசர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் இந்த நாட்டில், விமான நிலையமொன்று இல்லாதமை சிறப்பம்சமாகும். சுவிற்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தினூடாகவே இந்நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும்.
சான் மெரினோ
அப்டிபனின் மலைகளில் அமைந்துள்ள முழுமையாக இத்தாலியினால் சூழப்பட்ட நாடாகும். இதன் பரப்பளவு 61 சதுர கிலோமீற்றர் ஆகும். உலகின் அமைதியான பழமை வாய்ந்த சுதந்திர நாடு என்ற சிறப்பினைக் கொண்டது. இது 300 ஆண்டளவில் உருவாக்கப்பட்ட நாடு. இதன் அரசியலமைப்பு 1600 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. இந்த நாட்டின் பிரதான மொழி இத்தாலிய மொழி ஆகும். மேலும், உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாகவும், ஐரோப்பாவின் மூன்றாவது சிறிய நாடாகவும் இது உள்ளது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை. அத்துடன், உழைப்புக் குறைவான நாடாகவம் இது கருதப்படுகின்றது.
துவாலு
முன்பு 'எலிஸ் தீவுகள்' என்று அழைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே பசுபிக் சமுத்திரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 26 சதுர கிலோமீற்றர் ஆகும். துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பிரதான தீவில் மட்டும் ஒரு வைத்தியசாலை இயங்குகின்றது. 19 நூற்றாண்டின் இறுதியில் இத் தீவுகள் பிரித்தானிய குடியேற்ற நாடாக மாறியது. பிரித்தானியாவிடம் இருந்து, 1978 இல் சுதந்திரம் பெற்றது. உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு. இங்குள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இந் நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். இந்நாட்டுக்கு இலகுவில் சென்றடைய முடியாமல் இருப்பதனால், நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
நவூரு
தெற்கு பசுபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் பரப்பளவு 21 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இங்குள்ள மக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 9500 வரை இருக்கும். அவுஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டிற்கு அதிகாரபூர்வமான தலைநகர் என எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் தீவில் உள்ளது. இங்கு வாழ்ந்த 12 இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டிலிருந்து வெளிப்பட்ட பொஸ்பேற் வளம் காரணமாக, 1980 இல் இந்த நாடு உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு 10 சதவீதமானவர்கள் அரசாங்க ஊழியர்களாக உள்ளனர். உலகில் அதிக பருமனான மனிதர்கள் இங்குதான் வாழ்கின்றனர். இதனால், இந்த நாட்டில் நீரிழிவு நோயாளிகளும் அதிகம். இங்கு வாழும் மக்களில் 40 சதவீதமானவர்கள் நோயாளிகளாவர். இந்நாடு பொதுநலவாய விளையாட்டுக்கள், ஒலிமபிக் போன்றவற்றில் பங்குபற்றுகிறது.
மொனாகோ
இந்த நாட்டின் பரப்பளவு 2 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இது மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள நாடாகும். அதேசமயம் தனிநபர் வாழ்வுக் காலம் அதிகமான நாடும் இதுவே ஆகும். இங்குள்ள மக்கள் அண்ணவளவாக 90 ஆண்டுகள் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான லட்சாதிபதிகளும் கோடிஸ்வரர்களும் வசிக்கும் நாடாகும். சூதாட்டம், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக, இந்நாடு செல்வந்தர்களினதும் பணம் படைத்தவர்களினதும் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது. நாட்டின் ஒரு பகுதி மத்தியதரைக் கடலால் சூழப்பட்டிருக்க, மற்றைய மூன்று பகுதிகளும் பிரான்ஸின் எல்லைகளாக காணப்படுகின்றன. சுற்றுலாதுறை இந்நாட்டின் முக்கிய தொழிலாகும். இது தனி நாடாக இருந்தாலும் இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது.
வத்திக்கான்
இத்தாலி நாட்டின் உரோம் நகரில் உள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடு வத்திகான். இதன் பரப்பளவு 0.44 சதுர கிலோமீற்றர் ஆகும். இங்குள்ள மக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1000 ஆகும். வத்திக்கான் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் மிகச் சிறிய நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தை ஆவார். 1929 முதல் வத்திக்கான் தன்னாட்சி நாடாக உருவெடுத்தது. உலகின் மிகச்சிறிய நாடாக வத்திக்கான் உள்ளது. கத்தோலிக்கர்களினது புண்ணிய பூமி என்பதால், பரிசுத்தமான தேசமாகவும் கருதப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான சென். பீற்றர்ஸ் பெசிலிக்காவும் இங்குதான் அமைந்துள்ளது. மறுமலர்ச்சிக் காலத்தின் விசேட கலைப்படைப்புகளையும் இங்கு காணலாம். இது ஒரு முக்கியமான சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.
Comments
Post a Comment