ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஜான் பெர்கின்ஸின் சுயசரிதை என்றே சொல்லாம். இது 2004 இல் ஆங்கிலத்தில் ஜான் பெர்கின்ஸால் வெளியிடப்பட்டது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதால் பல நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்தது. இதற்கு இருந்த வரவேற்பின் காரணமாக 2012 இல் இரா.முருகவேள் இதை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழிலும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெர்கின்ஸின் சொந்த அனுபவங்களே ஆகும். அவர் ஒரு பொருளாதார அடியாளாக தனது வாழ்பனுபவத்தை பகிர்ந்துள்ளார். பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்களே பொருளாதார அடியாட்கள் ஆவார். இந்த நூலில் கூறப்படுவது அவ்வாறான ஒரு அடியாளான ஜான் பெர்கின்ஸின் வாக்குமூலமே ஆகும். இதில் அமெரிக்கா உலக நாடுகளின் மீது எவ்வாறு கொடூரமாக செயற்பட்டது என்பதை ஜான் பெர்கின்ஸ் கூற விளைகிறார். உலக வங்கிகளில் பெற்று மூன்றாம் தர நாடுகளுக்கு கொடுக்கப்படும் கடன்கள் மீண்டும் அமெரிக்காவையே வந்தடைகிறது. அமெரிக்கா கடன்களை வழங்கும் போதே அபிவிருத்திக்கு தேவையான ஏற்றுமதிகளை தங்களிடமே பெறவேண்டும் என ஒப்பந்தமும் இட்டுக் கொள்ளும். இதனால் அவர்கள் வழங்கும் கடன் மீண்டும் அவர்களிடமே சென்றடைகிறது. அதேசமயம் கடன் வாங்கிய நாடு நீண்டகாலத்திற்கு கடனாளியாகவே இருக்கும். 

அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு மெயின் என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பொருளாதார நிபுணராக வேலையில் சேர்கிறார் பெர்கின்ஸ். மெயின் என்பது ஒரு கட்டுமான நிறுவனமாகும். இது சர்வதேச நிதி நிறுவனத்திடம் இருந்தும், உலக வங்கியிடம் இருந்தும் நிதிகளை பெற்று அதை மூன்றாம் தர உலக நாடுகளிடம் கடனாக கொடுத்து அவர்களுக்கான திட்டமிடல்களையும் உருவாக்கி, உள்கட்டுமான பணிகளை விரிவடையகூடிய வேலையை செய்கிறது. அது ஏன் மூன்றாம் தர நாடுகள்?, ஏனெனில் அவர்களால் தான் கொடுத்த கடன்களை திருப்பி கொடுக்க முடியாவிட்டால் அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான அந்த நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள், எண்ணெய் வளங்கள் என அனைத்தையும் பெற்றுகொள்ள முடிந்த அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு சாதகமாக பேச வைக்க முடியும். இந்தோனேசியாவிற்கும் இவ்வாறு கடனை கொடுக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்தோனேசியாவால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை. இங்கே இவர்கள் உருவாக்கும் மின்சாரமயமாக்கும் திட்டம் தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏதுவாக அமைந்தது. இந்தோனேசியாவில் ஏற்படும் மாற்றம் மத்திய கிழக்கில் சாதகமான விளைவை ஏற்படுத்தியது. 

சவூதி அரேபியா, ஈராக், ஈரான் எனபன இயற்கையாகவே எண்ணெய் வளம் மிக்க நாடுகள். எண்ணெய் வளம் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் உலக வல்லராசாக இருக்கமுடியும். அந்தளவிற்கு அன்றாட வாழ்வில் எண்ணெய் முக்கியதுவம் பெறுகிறது. உலகில் எழுதப்படாத சட்டமாக இது காணப்படுகிறது. வெளி உலகிற்கு வரும் எண்ணெய் வளங்களில் பெரும் பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வருகிறது. அதனால் உலக சந்தையில் எண்ணெயின் விலையை சவூதி அரேபிய கூட்டமைப்புக்களே தீர்மானித்தன. இது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக அமைந்தது. அதனால் மத்திய கிழக்கு நாடுகளை உலகமாயமாக்கல் எனும் போர்வையில் பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி அவர்களுக்கு வழங்கி தம்வசப்படுத்த எண்ணியது. இதற்கு அந்நாடுகள் கொடுத்த விலை தங்கள் சுதந்திரம். வாங்கிய கடகன்களை திருப்பிச் செலுத்த முடியாது போகவே உலக அரங்கில் அமெரிக்க எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. சவூதி அரேபியாவிற்கு அருகில் உள்ள ஏனைய இஸ்லாமிய நாடுகளை அமெரிக்கா தாக்கினால் கூட சவூதி அரேபியாவால் எதுவும் செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது. அவ்வாறு எதிர்க்கும் அரசுகளை பதவியில் இருந்து இறக்கி அந்த இடத்திற்கு தங்களுக்கு சாதகமான பொம்மை அரசுகளை பதவியேற்க வைத்தது. இதை எதிர்த்து சதாம் போன்ற தலைவர்கள் எண்ணெய் வளத்தை தேசியமாக்க போவதாக தெரிவித்த போது அவர்களை தீவிரவாதியாக்கி அவர்கள் கொன்றது. 

அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் பனாமா கால்வாய் கட்டப்படும் இடத்திற்கு செல்கிறார் பெர்கின்ஸ். அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்டரும் பானமா நாட்டின் அதிபரும் இணைந்து ஒரு கால்வாய் கட்ட ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இடுகின்றனர். அந்த கால்வiயை கட்டுவதற்கு பானமா மக்களுக்கும் தொழில் ஒன்றை வழங்கும் நோக்கில் அவர்களே நியமிக்கப்பட்டனர். காட்டருக்கு அடுத்து அமெரிக்க அதிபராக வந்த ரீகன் கடல் வரத்தகத்தை அதிகரிக்க பனாமா கால்வாய் தங்களுக்கே சொந்தம் என சொல்கிறார். இதனால் பனாமா அதிபரான ஒமார் டோரிஜோஸ்க்கும் ரீகன் நிர்வாகத்திற்கும் இடையிலான முரண்பாடு அதிகரிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வளையாமல் இருந்து வந்து 1980 களில் ஒமார் டோரிஜோஸ் விமான விபத்தில் இறக்கிறார். அதேபோல இந்த கொடூர ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஈக்வாடர் அதிபரும் விமான விபத்தில் இறக்கிறார். இவை இயற்கை மரணமல்ல திட்டமிட்ட கொலை எனவும், இந்த சம்பங்களுக்கு பிண்னனியில் குள்ளநரிகள் என்ற அமைப்பு இருப்பதாகவும் சில குறிப்புக்களை பெர்க்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார அடியாட்களை போல குள்ளநரிகள் அமைப்பும் ஏகாதிபத்தியத்தின் கீழ் இயங்குகிறது. பொருளாதார அடியாட்களால் முடியாததை குள்ளநரிகள் நிறைவேற்றுவார்கள்.

இந்த ஏகாதிபத்திய கொடூரங்களை அறிந்த பெர்கின்ஸ் தான் இவ்வாறான ஒரு நிறுவனங்கள் பற்றிய உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வர எண்ணி இந்த புத்தகத்தை எழுத திட்டமிடுகிறார். ஆனாலும் அவருக்கு பல எதிர்ப்புக்கள் எழும்பின. அதேநேரம் கொலை மிரட்டல்களும் வரவே பல தடவைகள் இந்த முயற்சியை கைவிட்டார். 2001 இல் நடந்த சம்பவத்தின் பின், எந்த கொள்கைகளும் இன்றி இயங்கும் முதலாளித்துவ நிறுவனங்களை இல்லாதொழிக்க எண்ணுகிறார். தொடர்ச்சியாக சுரண்டப்படுபவர்கள் ஒரு நாள் அதற்கு எதிராக எதிர்த்து நிற்பார்கள் இது வரலாற்று உண்மை என கூறி முடித்திருக்கிறார் பெர்கின்ஸ். மெயினில் வேலை செய்யும் 2000 பேர்களில் பெர்கின்ஸ் ஒருவர் மட்டுமே. அவர் ஒருவரிடம் இருந்தே இவ்வளவு உண்மைகள் வெளிவந்திருக்கிறது என்றால் மெயின் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு பெரிய குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்? மெயினின் உண்மை முகம் வெளிவந்தால் கூட அதனால் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லலை. ஏனெனில் இந்த நிறுவனம் தனியார் நிறுவனமாக இயங்கி வருகிறது. சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அது அமெரிக்காவை எந்தவித்திலும் பாதிக்காது. உலக அரசியலை எளிதில் விளங்கிக்கொள்ள கட்டாயம் வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம் ஆகும். இதில் கூறப்பட்டது ஏகாதிபத்தியத்தின் பாதிமுகமே ஆகும். இன்னும் வெளிவராமல் பல தகவல்கள் இருக்கிறது. 

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்