சுவையான மருத்துவ குணமும் கொண்ட மாம்பழம்
பழங்களின் அரசன் என அடைமொழி கொண்டு அழைக்கப்படும் பழம் தான் மாம்பழம். இலகுவில் நாம் பெறக்கூடிய பழங்களில் மாம்பழமும் ஓன்று. உலகில் அதிகளவான மக்களால் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் முதன்மையானது மாம்பழமாகும். சித்திரை வைகாசி மாதங்களில் பொதுவாக மாம்பழம் பெருமளவில் கிடைக்கின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் மாமரங்களை நாம் காணலாம். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள முக்கனிகளில் ஒன்று தான் இந்த மாம்பழம். இந்த பழம் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாகவும் உள்ளது. மாம்பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. மாமரம் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது. இந்த மாமரங்களின் தோற்றம் இந்தியாவில் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்கள் புராண கதைகளில் இருந்து தற்போது வரும் சினிமா பாடல்கள், கவிதைகள் வரை இடம்பெற்றிருப்பது மாம்பழத்திற்கு உண்டான சிறப்பை எடுத்துகூறுகிறது. இன்று உலகம் முழுவதும் பல வகையான இன மாமரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் சேலத்து மாம்பழத்திற்கும் ஈழத்தின் யாழ்ப்பாண மாம்பழத்திற்கும் ஒரு தனி மவுசு எப்பொழுதுமே உண்டு. எனவே, மாம்பழம் குறித்த பல்வேறு சுவையான தகவல்களையும் அதன் மருத்துவ குணங்களையும் நன்மை தீமைகளையும் பற்றி ஆராய்வோம்.
மாம்பழ வகைகள்
பொதுவாக சித்திரை வைகாசி மாதங்களில் மாம்பழம் அதிகமாக விளைந்தாலும் பங்குனி முதல் ஆடி வரையான காலப்பகுதிகளே மாம்பழம் அதிகமாக விளையும் பருவ (சீசன்) காலமாக இருக்கின்றது. ருமானி, பெங்களூரா, விலாட்டு, பாண்டி, சேலம் பங்கபைல்லி, பீத்தர், மல்கோவா, வெள்ளைக்கொழும்பான், கறுத்தைக்கொழும்பான் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் சந்தைக்கு வருகின்றன. சிலவகை மாம்பழங்கள் அதிக இனிப்பாக இருக்கும். சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்து ஒரு வகை ருசியோடு இருக்கும். சிலவகை மாம்பழங்களோ வெறும் புளிப்பாக இருக்கும். சில பழங்கள் சதைப்பற்றாக உண்பதற்கு மா போல் இருக்கும். சில நாராகவும் இருக்கும். மாம்பழத்தை முழு உணவாகக் கொள்ளலாம். இது எல்லா வகையான சத்துக்களையும் தன்னுள்ளே கொண்ட சுவையான பழமாகும். இப்பழத்தில் 'விற்றமின் ஏ' உயிர்ச்சத்து அதிக அளவில் இருக்கின்றது. வேறு எந்தப் பழவகைகளிலும் இச்சத்து இந்தளவு அதிகமாகக் கிடையாது. சிலர் மாம்பழம் உடலுக்கு அதிக உஸ்ணத்தை ஏற்படுத்துகின்றது என்பர். ஆனால், சமையலின் போது பயன்படுத்தப்படும் புளி போன்ற சுவையூட்டிகளை விட குறைந்தளவு உஸ்ணமே மாம்பழத்தில் இருக்கின்றது என்பதுதான் உண்மை. மேலும் அப்பிள், கொய்யா, எலுமிச்சை, வாழைப்பழம் இவைகளில் இருக்கும் உஸ்ணத்தை விட ஒப்பீட்டளவில் மாம்பழத்தின் உஸ்ண அளவு குறைவுதான். எனவே, சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரும் இப்பழத்தை தினம் உண்டு சுவைக்கலாம்.
மாம்பழம் சாப்பிடும் முறை
மாம்பழம் பெரும்பாலும் அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. மாம்பழத்தை பலர் உணவோடு சேர்த்து உண்கிறார்கள். அதாவது, உணவில் காய்கறிக்குப் பதிலாக பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். மாம்பழத்தை காலையில் அல்லது மாலையில் தனியாகத்தான் உண்ண வேண்டும். உணவோடு உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சுருக்கமாகக் கூறின் இப்பழத்தை உண்ண நினைப்பவர்கள் சாப்பாட்டிற்குப் பின் உண்பது நல்லது. இதனை வெறும் வயிற்றில் உண்பதை தவிர்க்க வேண்டும். மாங்காய் துண்டுகளை மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்ணும் வழக்கம் எம்மிடையே காணப்படுகிறது. அனேகமாக பாடசாலை மாணவர்களிடையே இது பிரபல்யமான ஒன்று. பல நாடுகளில் இந்த மாம்பழங்களை பல வகைளில் பல விதமாக தயாரித்து உணவில் சேர்க்கின்றனர். உதாரணமாக ஊறுகாய், லஸ்சி, அம்ச்சூர், புளிப்பு பச்சடி என பல பெயர்களை கொண்டாலும் எல்லாவற்றிற்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
வயிற்றுப் புண் குணமாக - காலை உணவு முடிந்ததும் 30 நிமிடங்களுக்குப் பின் 50 கிராம் மாம்பழச் சாறுடன் ஒரு தேக்கரண்டி நெய்யும் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து பருகி வந்தால் சிலநாட்களில் வயிற்றுப்புண் குணமாகும். பழச்சாறைப் பருகும் பொழுது அதிகமாக மலம் கழிந்தால் தேனை சற்று அதிகமாக்கினால் கழிவு நின்றுவிடும்.
இருதயம் பலமடைய - சதைப்பற்றுள்ள இரண்டு மாம்பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேன், குங்குமப் பூ, ஏலக்காய் தூள், பச்சைக்கற்பூரம் இவைகளை சிறிதளவு எடுத்து, இப்பழச் சாற்றில் கலந்து, பாலையும் சேர்த்து உண்டால் இருதயம் பலப்படும். தொடர்ந்து 15 நாட்களாவது இரவில் உணவுக்குப் பின் பருகி வர இருதயம் நன்கு பலப்படும்.
சிறுநீர்ப்பையில் உள்ள கற்களைக் கரைக்க - மாம்பழத்தை உண்டு விட்டு, அதன் கொட்டையிலுள்ள பருப்பை எடுத்துச் சுட்டு சிறிது உண்பது நல்லது. இம்மாதிரி அவ்வப்போது உண்டு வந்தால் சிறுநீர்ப்பையில் உள்ள கற்களையே கரைத்து விடலாம்.
தோல் சுருக்கம் நீங்க - இரவு உணவுக்குப் பின் மாம்பழத்தை உண்டு விட்டு, ஒரு டம்ளர் பாலையும் பருகி வந்தால் முகம் அழகு பெறும் தோல் சுருக்கம் நீங்கிப் பளபளப்பாகும்.
வாந்திபேதி குணமாக - மாம்பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை வெந்நீரில் கலந்து, சிறிது சீனியையும் சேர்த்துப் பருகினால் வாந்திபேதி நோய் குணமாகும்.
பசி அதிகரிக்க - பலருக்குப் பசியே எடுப்பதில்லை. ஏதோ நேரத்திற்கு மிகுந்த சிரமத்துடன் சிறிது உணவு உண்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மாம்பிஞ்சுகளை நிழலில் காய வைத்து, பின் நறுக்கி, உப்பு நீரில் போட்டு வெயிலில் காயவைத்தல் வேண்டும். இதை அவ்வப்போது உணவோடு சேர்த்து உண்டு வந்தால், பசி அமோகமாக ஏற்படும்.
மாமரத்தின் இளந்தளிர் இலைகள், பூக்கள், மாம்பிஞ்சுகள், மாங்காய், மாம்பழம், மாம்பழத் தோல், மாமரப்பட்டை யாவுமே மருத்துவப் பயனுடையதாக இருக்கின்றன. மாங்காய் ஊறுகாய், மாம்பழ ஜேம், மாம்பழ ஜூஸ் (சாறு) என்பன சுவைமிகுந்த உணவுகளாகும். மாம்பழத் தோலை அரைத்து தேன் கலந்து, உண்டு வர சீதபேதி குணமாகும். மாம்பழத்தில் 'கரோட்டின்' சத்து மற்றப் பழங்களை விட அதிகமாக இருக்கிறது. 'கரோட்டின்' சத்து நமக்குத் தேவையான அளவு இல்லையெனில், சளித்தொற்று ஏற்படும். அத்துடன், ஈரல், குடல் போன்ற இடங்களில் ஏற்படும் பல்வேறு நோய்களை இப்பழம் தீர்க்கும்.
மாம்பழத்தினால் ஏற்படும் நன்மைகள்
கண்நோய்கள் பலவற்றை நீக்கும்.
வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை போக்கும்.
இரத்தம் விருத்தியாகும்.
சமிபாட்டை எளிமையாக்கும்.
பல் ஈறுகளைக் காக்கும்.
மூளைக்கு சக்தியைக் கொடுக்கும்
நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
மாலைக்கண் கோளாறைப் போக்கும்.
உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.
வயிற்றிலுளள கிருமிகளை அழிக்கும்.
ஈரல் சம்பந்தமான நோய்களை போக்கும்
கொழுப்புச் சத்து இல்லாதவர்களுக்கு, கொழுப்புச் சத்தைத் தரும்.
வியர்வையைப் பெருக்கும்.
உடல் வலிமையைத் தரும்.
நீரிழிவு உள்ளவர்களும் சொறி, சிரங்கு அதிகம் கொண்டவர்களும் மாம்பழத்தை உண்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். மாங்காயின் பால் சிலருக்கு தோல் எரிச்சலையும் கொப்பளங்களையும் ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உண்டு. மா மரங்கள் பூக்கும் போது பூவின் மகரந்தம் காற்றில் பரவி சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம், கண்களில் எரிவு, முக வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மாம்பழத்திலுள்ள சத்துக்களின் அண்ணளவான மதிப்பீடு
நீர்(ஈரப்பதன்) -76.0 கிராம்நார் - 0.6 கிராம்தாதுப்பொருள் - 0.4 கிராம்புரதம் - 0.5 கிராம்மாப்பொருள் - 17.0 கிராம்சுண்ணாம்புச்சத்து - 13.0 மில்லி கிராம்பொஸ்பரஸ் - 15.0 மில்லி கிராம்கரோட்டின் - 2740.0 மைக்ரோ கிராம்எரிசக்தி - 72.0 கலோரிதையமின் - 0.7 மில்லி கிராம்நியாசின் - 0.8 மில்லி கிராம்ரைபோஃபிளேவின் - 0.08 மில்லி கிராம்
விற்றமின் சி - 16.0 மில்லி கிராம்
மாம்பழங்கள் நாம் எளிதில் பெறகூடிய பழவகை ஆகும். இதில் ஏராளமான இயற்கை மருத்துவ குணங்கள் உண்டு. நம் முன்னோர்கள் மாம்பழத்தை முக்கனிகளில் ஒன்றாக இதை சேர்த்துள்ளனர் என்றால் அதற்கான காரணங்கள் நிச்சயம் இருக்கும் எமது வீடுகளிலேயே நாம் மாமரங்களை நாட்டி அதன் உச்ச பயனை பெறமுடியும். மாமரங்கள் 100 ஆண்டுகளிற்கு மேலும் தனது பயனை வழங்க முடியும். இதனால் தேகபலன் மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் எம்மால் பயன் பெற முடியும். ஆகவே இவ்வாறான பழ மரங்களில் இருந்து உச்சபயனை பெற்று எமது வாழ்வை செழிப்பாக வாழலாம்.
Comments
Post a Comment