சாண்டில்யனின் ராஜ பேரிகை
சாண்டில்யனின் மாபெரும் படைப்புகளில் ஒன்று தான் சரித்திர நாவலான ராஜ பேரிகை. அரச குலத்தாரின் வருகையையோ அல்லது எதிரிகளின் வரவையோ குறிப்பதாக எழுப்பப்படும் ஒலியே ராஜ பேரிகையின் சப்தம் ஆகும். கல்கியின் நாவல்களை போல இவருடைய நாவல்களுக்கும் தனியான ரசிகப் பட்டாளமே உண்டு. இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலின் கதைக்களம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேய காலணித்துவத்தில் இந்திய அடிமையாக இருந்த சமயத்தில் நடைபெறுவது போல் கூறப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கோடு வந்த ஆங்கிலேயர்கள் எவ்வாறு பாரதத்தை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்பதை பல வரலாற்று சம்பவங்களுடன் கலந்து விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆங்கிலேய படையெடுப்பினையும் அவர்களின் தந்திரங்களையும் தனது கற்பனையையும் கலந்து சுவையாக சொல்லியுள்ளார் ஆசிரியர். வரலாற்று தகவல்கள் ஏராளமாக கொட்டி கிடக்கிறது இந்த நூலில். இந்த கதைக் களத்தில் நட்பு, காதல், வீரம் துரோகம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டுவந்துள்ளார். இந்த நாவலும் ஆரம்பத்தில் குமுதத்தில் இரண்டு வருடங்களாக தொடர்கதையாக வெளி வந்து பின்னர் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற பின்னர் நூலாக வெளிவந்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கன் சந்நிதியில் ஆரம்பிக்கிறது இந்த கதை. அரங்கனை வழிபட வருகிறாள் தஞ்சை மன்னரின் மகள் நந்தனி. அவள் வழிபாட்டுக்கு வரும் வேளை சந்நிதியில் வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் அன்று விஜயகுமாரன் என்ற இளைஞன் அரங்கனுக்கு முன் இளவரசி வரும் வேளையில் தியானத்தில் இருந்தான். அவனுடன் அவன் வாளும் இருக்கவே டபீர் பண்டிதர் அந்த இளைஞனின் மீது சந்தேகப்பட்டு அவனை சிறைபிடிக்க ஆணையிடுகிறார். ஆதற்குள் அந்த இளைஞன் நந்தினியை கடத்திக் கொண்டு அரங்கனின் கோவிலை விட்டு தப்பி செல்கிறான். அவளை கடத்தி செல்லும் வழியில் முராரிராவ் மூலமாக நந்தினி ராஜா பிரதாப் சிங்கின் மகள் என்று அறிகிறான் விஜயகுமாரன். முராரிராவ் நந்தினியையும், விஜயகுமாரனையும் தஞ்சை நோக்கி அழைத்துச் செல்லும் வழியில் ராபர்ட் கிளைவ் எனும் வெள்ளைக்கார வாலிபனை சந்திக்கின்றனர். அவனே பின்பு தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சி நிலை பெற காரணமாக அமையபோகிறான் என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. தஞ்சை செல்லும் வழியில் முஸ்லிம் வீரர்களுடனும் பிரெஞ்சு வீரர்களுடனும் கிளைவும், விஜயகுமாரனும் இணைந்து சண்டையிடுகின்றனர். அந்த சண்டையில் விஜயகுமாரன் கிளைவின் உயிரை காப்பாற்றுகிறான். இந்த சண்டை காட்சிகளை ஆசிரியர் சாண்டில்யன் மிகவும் அற்புதமாக வர்ணித்திருப்பார். பின் மூவரும் அரண்மனைக்கு வந்து சேருகின்றனர்.
பெரும் அரசியல் ஞானியான தஞ்சையின் அரசர் பிரதாப் சிங், விஜயகுமாரனை சந்தித்த உடனேயே அவன் யார் என்பதையும் அவனுள் இருக்கும் மர்மத்தையும் அறிகிறார். அரசர், கிளைவ் மூலம் ஆங்கிலேய கவர்னருக்கு காட்டுராஜாவோடு நம்பி அவனுடன் இணைந்து போரில் இறங்க வேண்டாம் என தகவல் சொல்லி அனுப்புகிறார். விஜயகுமாரன் மேல் காதல் கொண்ட நந்தினி அரண்மனை அந்தப்புரத்தில் விஜயகுமாரனை சந்தித்து அவன் அரங்கன் ஆலயத்தில் செய்த சபதத்தை பற்றி வினவுகிறாள். ஆற்காட்டு நவாப்களால் அவனது தாய் ராணி மீனாட்சிக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கூறுகிறான். அதற்கு பழிவாங்கவே சபதம் செய்ததாக கூறுகிறான். அதேசமயம் கிளைவ், கவர்ணரிடம் அரசர் கூறிய செய்தியை கூறுகிறான். ஆனாலும் கவர்னர் தேவிகோட்டையை தாக்கி அழிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் கவர்ணர் நம்பிய காட்டுராஜா மதுக்கு அடிமையாகி பொழுது முழுவதும் போதையில் இருந்தான். தஞ்சை படையும், ஆங்கிலேய படையும் தேவிகோட்டையை கைப்பற்றும் நோக்கில் போருக்கு தயாரானார்கள். விஜயகுமாரான் கோட்டை தளபதி மானாஜி போன்றோரின் போர் தந்திரங்களால் ஆங்கிலேய படை தோல்வியை தழுவியது. மீண்டும் ஆங்கிலேய படை தேவிக் கோட்டையை கைப்பற்றும் முனைப்பில் போருக்கு வந்தது. கிளைவ் தலைமையில் சிறுபடை மறைமுக தாக்குதலுக்கு தாயாரானது ஆனாலும் அது முறியடிக்கப்பட்டது. அப்போது தஞ்சை மன்னர் சமாதான தூது அனுப்பினார். தாம் கோட்டையை விட்டுகொடுப்பதாக. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இரண்டாம் பாகத்தின் தொடக்கம் புதுச்சேரியில் பிரெஞ்சு கோட்டையில் ஆரம்பிக்கிறது. தஞ்சைக் கோட்டையில் அரசரின் சமாதான தூது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அரசர் பிரெஞ்காரரிடம் இருக்கும் திருச்சியை கைப்பற்றும் தனது எண்ணத்தை தெரிவிக்கிறார். ஆனால் தஞ்சை படையில் பிரதான பதவியில் இருந்த விஜயகுமாரன் அதைவிடுத்து தனது சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு கிளைவிடம் செல்கிறான். விஜயகுமாரன் கிளைவிடம் தனது நவாப்பை கொல்ல வேண்டும் என்ற சபதத்தை பற்றி கூறுகிறான். அதற்கு கிளைவும் சம்மதித்து விஜயகுமாரனுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் வாக்களித்தான். ஆங்கிலேய கவர்னராக ஸாண்டர்ஸ் வருகிறார். அவர் மிகுந்த புத்திசாலி அவர் வந்தவுடன் கிளைவ், மற்றும் விஜயகுமாரனுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. விஜயகுமாரன் ஆங்கிலேய தூதுவனாக மீண்டும் தஞ்சை வருகிறான். அவன் தஞ்சை படை ஆங்கிலேயருடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க தஞ்சை அரசர் சம்மதிக்கிறார். ஆற்காட்டின் மீது படையெடுக்க ஜின்ஜின்ஸை கவர்னர் அனுப்பினார். ஆனால் அவர் தாக்குதலை தொடங்காமல் வீணாக காலத்தை கழித்துக் கொண்டிருந்தார். ஜின்ஜினின் கூடாரங்களில் நடப்பதை உளவு பார்க்க ஆற்காட்டு நவாப் ஒரு பெண்னை அனுப்பியிருந்தான். அதை வஹாப்கான் எனும் தளபதி அறிந்து அவளை சிறைப்பிடிக்கிறான். ஆனால் ஜின்ஜினுக்கு இது பற்றி ஏதும் தெரியவில்லை. அவன் பெண்கள், குடி என உல்லாசமாக இருந்தான். திருச்சியை கைப்பற்றும் நோக்கில் விஜயகுமாரனும் கிளைவும் தங்கள் படையுடன் தேவிக்கோட்டைக்கு வருகின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் இதே இடத்தில் தான் தங்கள் தங்கள் நாடுகளுக்காக எதிரிகளாக சண்டையிட்டனர் ஆனால் தற்போது ஒரே அணியில் உள்ளனர்.
கிளைவ் திருச்சியை கைப்பற்ற கடல் மார்க்கமாக செல்ல விஜயகுமாரன் தஞ்சை நோக்கி செல்கிறான். கிளைவின் படை மெதுமெதுவாக நகர்ந்தது. காஞ்சியில் வரதராஜா பெருமான் கோயிலில் தங்கள் இரவு பொழுதை கழிக்க முடிவெடுத்து கிளைவின் படை கோயிலில் தங்கியது. அன்றிரவு கிளைவுக்கு உடல் சுகயீனமுறவே அங்கு வந்த பட்டர் வரதராஜ பெருமானின் தீர்த்தத்தை கொடுக்கிறார். மறுநாளே நோய் குணமாகிவிடுகிறது. அதன்பின் ஆற்காட்டுக்குள் புகுந்த கிளைவின் படை அங்கிருந்த சொத்துக்களை எடுத்து கொண்டு சென்றது. அங்கு கிடைத்த மதிப்புமிக்க பொருளான மகரகண்டி எனும் ஆபரணத்தை எடுத்து வரதராஜ பெருமானிடம் சமர்பித்தார் கிளைவ். தஞ்சை சென்ற விஜயகுமாரன் கிளைவின் திட்டத்தை கூறி தஞ்சை படைகளை தயார் செய்கிறான். தஞ்சையில் விஜயகுமாரனுக்கு உப தளபதி பதவி வழங்கப்படுகிறது. அடுத்து முராரிராவின் உதவியை பெற சென்றான் விஜயகுமாரன். ஆற்காட்டு கோட்டைக்குள் அவுரங்கசீப்பின் வரலாற்று சிறப்புமிக்க பீரங்கியை கிளைவ் வெளியில் எடுத்து ராஜா சாகிப்பின் கோட்டையை நோக்கி நிறுத்தினான். விஜயகுமாரன் தாவூத்தாக வேடமிட்டு சாகிப்பின் கோட்டைக்குள் சென்று அவனுடைய போர் திட்டத்தை குழப்பி உடனடியாக போரை தொடக்கும்படி கூறி அவர்களின் போர் தந்திரங்களை தெரிந்து கொள்கிறான். முராரிராவின் படைகளும் அங்கு வரவே ஆற்காட்டு இறுதி யுத்தம் ஆரம்பமானது. ஆற்காட்டை வென்ற பின்பு பிரெஞ்ச் படைகளுடன் போர் தொடங்கியது. அந்த போரில் பிரெஞ்சு படை தோல்வியடைந்து கொண்டு இருந்த வேளையில் சந்தா சாகிப் தான் சரணடைவதாக அறிவித்து கப்பமும் கொடுக்கிறான் தஞ்சை தளபதி மானாஜிக்கு. ஆனால் அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். இந்த சாகிப்பை கொல்லவேண்டும் என்று தான் பல வருடங்களாக விஜயகுமாரன் காத்திருந்தான். சாகிப்பை மானாஜி அழைத்து வந்து விஜயகுமாரனிடம் ஒப்படைக்கிறார். சரணடைந்த சாகிப்பை கொன்று தன் சபதம் முடித்தானா விஜயகுமாரன் அல்லது சரணடைந்தபடியால் மன்னிப்பு வழங்கினானா? என்பதே கதையின் முடிவாக உள்ளது.
இது வரலாறுகளில் நடந்த சாதாரண ஒரு யுத்தமாக கருத முடியாது. ஏனெனில் இது இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி வேரூன்ற காரணமாக அமைந்த யுத்தமாகும். இக்கதையில் நிகழும் சம்பவங்கள் தஞ்சை, காஞ்சி, ஆற்காடு, திருச்சி, போன்ற நகரங்களை மையமாக கொண்டு நடந்திருக்கிறது. இந்த தொடரில் பல கிளை கதைகள் இருந்தாலும் அவை கதையை குழப்பாத வகையில் இருந்தமை சிறப்பானதாகும். இதில் வந்த கிளைவ், விஜயகுமாரன் இருவரும் நாடுகள் வேறுவேறு என்றாலும் அவர்களுக்குள் இருந்த நட்பு அழகாக கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டதற்கு முக்கிய காரணம் அரசர்களுக்கிடையே இருந்த ஒற்றுமையின்மையும், சுயநலத்திற்காக அந்நியருடன் சேர்ந்து கொண்டு தங்கள் நாட்டவரையே காட்டிக்கொடுத்த துரோகிகளுமே ஆகும். முராரிராவ், மானாஜி போன்ற பாத்திரங்கள் கதையோட்டத்தோடு இணைந்திருந்தமை அற்புதமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment