நமக்காகவே தன்னை அர்ப்பணிக்கும் தென்னை

கடல் வழியாக இலங்கைக்கு வரும் ஒரு பயணிக்கு முதலில் தெரிவது வானை முட்டுமளவுக்கு  உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள் நிறைந்த கரையோரப் பகுதியாகும். இலங்கை, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் தென்னை அதிகமாக வளர்கின்றது. எமது நாட்டின் பணப்பயிர்களில் தென்னையும் ஒன்று. அந்தவகையில் எமது நாட்டில் தென்னைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான், தற்போது தெங்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இலங்கை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது. முழு இலங்கையினதும் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2700 மில்லியனுக்கும் 2900 மில்லியனுக்கும் இடைப்பட்டதாகும். இவற்றில் 80மூ உள்நாட்டுப் பாவனைக்கு உதவுகிறது. இலங்கையரின் உணவில் அவர்களுக்கான 10% புரதத்தையும், 22ம% ஊட்டச்சத்தையும் கொழுப்பையும் தேங்காயே வழங்குகின்றது. இவ்வாறாக ஓர் இலங்கையர் வருடத்திற்கு உணவில் 90 தேங்காய்களையும் ஐந்து போத்தல்கள் எண்ணெய்யையும் சேர்த்துக்கொள்வதாகக் கூறப்படுகின்றது. தேங்காய் மாத்திரமன்றி; தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் அன்றாட தேவைகளுக்காக ஏதோ ஒருவகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வீட்டுத்தோட்டத்தின் சிறியதோர் இடத்திலேனும் தென்னங்கன்று ஒன்றை நாட்டிப் பயன்பெற வேண்டும்.


அன்றாட பாவனையில் தேங்காய் 

தினந்தோறும் சமையலில் பல்வேறு வகைகளில் தேங்காய் பயன்படுத்தப்படுகின்றது. துருவப்பட்ட தேங்காய் நேரடியாகவும் பால் பிழிந்தும் சமையலுக்குப் பயன்படுகின்றது. சிலர் பாலைப் பிழிந்த பின்னர் பெறப்படும் சக்கையையும் (தேங்காய்ப் பூ) சமையலுக்குப் பயன்படுத்துவர். இன்னும் சிலர் அதனை பிற தேவைகளுக்காகவோ அல்லது எறிந்தோ விடுவர் எனினும், இந்த சக்கையில் நமது உடலுக்குத் தேவையான பல போசணைப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


தேங்காய்ப்பூவில் அடங்கியுள்ளவை 

நீர் 3.6%, கொழுப்பு 10.9%, நார்ச்சத்து 60.9ம%, கனியுப்பு 3.1%, புரதம் 12.1%, தேங்காய்ப் பூவில் அதிகம் அடங்கியுள்ள நார்ச்சத்தானது உடலுக்கு மிக அத்தியாவசியமானது. இந்த நார்ச்சத்தானது மலச்சிக்கல், நீரிழிவு உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவல்லது. எனவே, தேங்காயின் உள்ளீடு (பருப்பு - சதைப்பகுதி) முழுவதையும் உபயோகிப்பது சிறந்த பலனைத் தரும்.


இளநீர் மருத்துவம்

தாகத்தைத் தணிக்கவும் களைப்பை நீக்கவும் சிறுநீர் கடுப்பைப் போக்கவும் இளநீர் பயன்படுகிறது. தவிர, புழு நோயால் ஏற்படும் வாந்தியைக் கட்டுப்படுத்தி விரைவாகக் குணப்படுத்தக்கூடிய சிறந்த ஒளடத பானமாகவும் இளநீர் திகழ்கிறது. அதிக உஸ்ணமுள்ள உடலைக் குளிர்விக்கும் தன்மையும் கொண்டது. பித்தநோய் நிவாரணத்திற்காகக் கலக்கப்படும் பத்து மூலிகைகளில் இளநீரும் ஒன்றாகும். சின்னம்மையிலிருந்து குணம் பெறவும் இளநீர் பயன்படுகின்றது. இளநீரை அருந்துவதாலும் இளநீர் கோம்பையிலுள்ள வழுக்கலை உண்பதாலும் உடல் பொலிவு பெறுகிறது. உடலில் வெப்பம் அதிகரித்து நாக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுமாயின், அதனை ஆற்றுவற்கும் இளநீர் சிறந்த மருந்தாகும்.


இளநீரில் அடங்கியுள்ள போசனைப் பதார்த்தங்கள் .

100 கிராம் இளநீரில் 24 கிலோ கலோரி சக்தி அடங்கியுள்ளது. அத்தோடு 1.4 கிராம் புரதமும், 0.1 கிராம் கொழுப்புச் சத்தும் 4.4 கிராம் மாப்பொருளும் 24 மில்லிகிராம் கல்சியமும் 10 மில்லி கிராம் பொலஸ்பரசும் 0.1 கிராம் இரும்புச் சத்தும் 10 மைக்ரோ கிராம் தயமினும் 2 மில்லிகிராம் விற்றமின் ஊ யும் அடங்கியுள்ளன. இத்தகைய போசணைப் பதார்த்தங்கள் எமது உடல் வளர்ச்சிக்கு அவசியமானவையாகும்.


தேங்காய்ப் பாவனையில் புதிய முறை 

துருவிய தேங்காயிலிருந்து சிறிதளவேனும் வீணாகாமல் மீளப் பயன்பெறக் கூடிய ஒரு புது முறையை தெங்கு ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நாம் எமது வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அதன்படி, தேங்காய்ப்பூவை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். அல்லது அடுப்பில் வைத்து 80°ஊ உஸ்ணத்தில் ஒரு மணித்தியாலமேனும் நன்கு உலர்த்த வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பு உள்ளவர்கள் 100 கிராம் தேங்காயை நான்கு விநாடியில் உலர்த்திக்கொள்ள முடியும். பின்னர், அரைக்கும் இயந்திரத்தில் உலர்த்திய தேங்காயை இட்டு சில விநாடிகள் அரைத்து கிறீம் போல் செய்து சமையலின்போது பயன்படுத்தலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட க்றீமை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். இதனால், தேங்காய் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தில் கூடியளவு தொகையை மீதப்படுத்தலாம்.


பானமாகவும் உணவாகவும்

எமது முன்னோர்கள் பண்டைய காலத்திலிருந்தே வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு இளநீரை அருந்தக் கொடுத்து உபசரித்துள்ளனர். தென்னையின் இளங்காயின் நீரையும் அருந்துவர். இளங்காய் ஓரளவுக்கேனும் முற்றிய பின்னரே தேங்காயாக உணவுக்குப் பயன்படுகின்றது.


தென்னை மரத்தின் பயன்பாடுகள் சில...

பொதுவாக, தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்படவே செய்கின்றன. தேங்காய், உணவுக்கும் தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கும் பயன்படுகின்றது. சிரட்டை, அலங்காரப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் தயாரிக்கவும் எரிபொருளாகவும் பயன்படுகின்றது. தேங்காய் மட்டை, கயிறு தயாரிப்பு உட்பட தும்புத்தடி, கம்பளம் உற்பத்திற்கும் பயன்படுகின்றது. தென்னை மரத்தைக் கிழித்துப் பலகை பெறப்படுகின்றது. முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரைத் தேங்காயானது எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுகிறது. கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பின்னர் உள்ள சக்கையிலிருந்து புண்ணாக்கு தயாரிக்கப்படும். தென்னம்பூவிலிருந்து தென்னம்பாணி, வினாகிரி போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. ஓலை, கூரை வேய்வதிலும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர, ஏனைய பாகங்கள் யாவும் ஏதோ ஒருவகையில் நமக்குப் பயன்படுகின்றன. 


வீட்டுத்தோட்டத்தில் தென்னை வளர்ப்பு 

நமது வீட்டுத்தோட்டங்களில் தென்னங்கன்று ஒன்றை நடுவோமேயானால், காலப்போக்கில் அதிலிருந்து பல்வேறு பயன்களைப் பெறக்கூடியதாக இருக்கும் இதனால், ஏராளமான வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளமுடியும் என்பதோடு, பணமும் மீதப்படுத்தப்படும். தென்னையில் 'குந்திரா' வகைக்குரிய கன்றுகளை நடுவதற்கு சிறியதொரு இடம் போதுமானது. இவற்றை குறைந்த செலவில் பயிரிடலாம். அத்துடன், இந்தவகை தென்னை மரம் குறுகிய காலத்திலேயே காய்க்க தொடங்கும். இலங்கையில் தென்னை அதிகம் விளையும் மாவட்டங்களாக குருநாகல், புத்தளம், கொழும்பு ஆகியன திகழ்கின்றன. இப்பிரதேசங்களை ஒன்றிணைத்த பகுதி “தெங்கு முக்கோணம்' எனப்படுகிறது. இவை தவிர, பொதுவாக இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம். உப்புக்கலந்த மணற்பாங்கான கரையோரப் பிரதேசங்களில் தென்னை செழித்து வளரும். நல்ல மழையும் சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடங்களிலும் தென்னை வளரக்கூடியது.


தென்னங்கன்று நடும் முறை

செழிப்பான கன்றொன்றை நடுவதற்காக தோண்டப்படும் குழி 1x1x1 மீற்றர் அளவில் அமைய வேண்டும். பின்னர் அந்தக் குழியில் 1 அடி உயரத்திற்கு தும்புச்சோறு நிரப்பப்பட வேண்டும். தேவைப்படின் ஒரு கிலோகிராம் டொலமைட்டையும் சேர்க்கலாம். அதன்பின்னர், காபன் கலந்த உரம் மற்றும் மண்ணைப் போட்டு நிரப்ப வேண்டும். தரைமட்டத்திலிருந்து 20 செ.மீற்றர் ஆழத்தில் கன்று நடப்படல் வேண்டும். இதன்போது, தண்டின் அடிப்பகுதி மணலுக்கு மேலாக இருக்குமாறு நடப்படல் வேண்டும். கறையான்களிடமிருந்து கன்றைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் அருகில் காட்டுவெருகல் செடியை நடுவது சிறந்தது. கன்று நடப்பட்ட பகுதியில் உப்புத் தன்மையுடைய மணல் இல்லையெனின், உப்பைக் கரைத்து தென்னங்கன்றை சுற்றி ஊற்றிவிடலாம்.


தென்னை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் சில…

இலங்கை

இந்தியா 

இந்தோனேஷியா 

பிலிப்பைன்ஸ் 

அமெரிக்கா 

வியட்நாம்

பபுவா நியுகினியா

பிரேசில் 

மலேசியா

தாய்லாந்து

மெக்சிகோ


இலங்கையில் விளையும் தென்னை வகைகள் 

இலங்கையில் 3 வகையான தென்னை மரங்கள் வளர்கின்றன.

உயரவகை (டிபிகா)

இந்த வகைக்குரிய கன்று 20 மீற்றர் உயரம் வரை வளரும். கன்று நடப்பட்டு 5 அல்லது 8 ஆண்டுகளில் பலன் தரும். ஆண்டுக்கு சுமார் 40 காய்கள் மட்டுமே காய்க்கும். ஒரு மரத்திலிருந்து சுமார் 60 வருடங்கள் கழித்தே பலனைப் பெறக்கூடியதாக இருக்கும்.

குந்திரா

இது 10 மீற்றர் உயரம் வரை வளரும். 4 ஆண்டுகளில் காய்த்து, ஆண்டுக்கு 100 காய்களைத் தரும். எனினும், அதன் பயன் 40 ஆண்டுகளுக்கே நீடிக்கும். ரெஜியா, ஏபர்னியா, பியுமிலா எனும் பெயர்களால் அழைக்கப்படும். தென்னை மரங்கள் 'குந்திரா' வகையைச் சேர்ந்தவையே.

இளநீர்(ஒரன்டியாகா)

இது 20 மீற்றர் உயரம் வரை வளரும். 6 அல்லது 8 ஆண்டுகளில் பயன் தரும். ஆண்டுக்கு சுமார் 100 காய்கள் காய்க்கும். இதன் பலன் 40 வருடங்கள் வரை நீடிக்கும்.


தென்னையை வாழ்க்கை மரம் எளவும் அழைக்கும் வழக்கம் இலங்கையில் உள்ளது. அதற்கு காரணம் மேற் சொன்னதுபோன்று தென்னையின் எந்த பகுதியும் கழிவாக செல்வதில்லை. அனைத்துமே நமது தேவைகளை ஏதோ ஒரு விதத்தில் பயன்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தென்னை நீண்டகால பயிர் ஆதாலால் நாம் பயிரிடும் தென்னைகள் எமது எதிர்கால சந்ததிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான பராமரிப்பு செலவீனங்கள் மற்றவற்றை விட குறைவானதே. 


Comments

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்