தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தலின் அவசியம்

ஆவணப்படுத்தல் என்பது குறிப்பிட்ட சில நிகழ்வுகளை தலைமுறை கடந்தும் அதை தெரியப்படுத்த பேணி பாதுகாக்கும் ஒரு முறை ஆகும். ஆவணப்படுத்தல் நூல்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் போன்ற வடிவங்களிலும் இடம்பெறலாம், ஆவணமாக்கல் முறையானது முற்றுமுழுதாக உண்மைத் தன்மை உடையதாக, உள்ளதை உள்ளபடியாக சொல்வதாக இருக்க வேணடும். வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலம் நம் பழக்கவழக்கங்கள், அரசியல், கலாச்சாரங்கள், வாழ்க்கைமுறை போன்ற அடையாளங்களையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு இனத்தின் நிலைத்திருப்பிற்கு வரலாறு மிக முக்கியமானதாகும். எந்தவொரு இனம் தனது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சரியாக எடுத்து செல்கிறதோ அந்த இனமே காலமுள்ள வரை நிலைத்து நிற்கும். பண்டைய காலம் தொட்டு இன்று வரை எந்தவொரு இனம் தனது வரலாற்றை பாதுகாக்க தவறுகிறதோ அந்த இனம் காலவோட்டத்தில் காணாமல் போகும் என்பதில் ஐயமில்லை. இன்று தமிழினமும் இவ்வாறான ஒரு துரதிஸ்டமான நிலைக்கு வந்துள்ளமை கவலைக்குரியது. மிக நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட ஒரு இனம் இன்று தனது இருப்பை நிலைநிறுத்த மிக பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் மிக பெரிய பலவீனமே தங்கள் சுவடுகளை ஆவணப்படுத்தாமையே ஆகும். இது ஆதிகாலத்தில் இருந்து தொடரும் துர்பாக்கியமான நிலையாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர் இலங்கை முழுதிலும் பரவலாக வாழ்ந்துள்னர். இதை ஆங்காங்கே கிடைக்கும் ஓரு சில தொல்லியல் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. ஆனாலும் முறையான ஆவணப்படுத்தல் இன்மையாலும், தமிழர் பிரதேசங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமையாலும் தமிழினத்தின் இருப்பு கேள்வி குறியாகியுள்ளது.

ஆவணப்படுத்தல் ஏன் முக்கியமானது என்றவொரு கேள்வி எழலாம். ஆவணப்படுத்திலின் மூலமே எதிர்காலத்திற்கு தேவையான வாழ்பனுபவங்களை கிடைக்க செய்ய முடியும். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் தொடர்சியே. நிகழ்கால தவறுகள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். எனவே நிகழ்காலத்தை சிறப்பான ஒன்றாக கட்டமைக்க கடந்த காலத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். கடந்தகால அனுபவங்களை வைத்தே நிகழ்கால பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியும். ஆகவே தான் ஆவணப்படுத்தல் மூலமே எமது இருப்பை நிலைநிறுத்த முடியும். ஏற்கனவே நாம் விட்ட தவறுகளை மீண்டும் செய்யமால் இருக்க ஆவணப்படுத்தல் முக்கியமாகிறது. உதராணமாக தமிழர் வரலாற்றில் துரோகம் என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. வரலாற்று காலம் முதல் நவீன காலம் வரை தமிழினம் துரோகத்தால் வீழ்ந்த கதைகள் ஏராளம். மன்னர் காலத்தில் இருந்து அந்நியராட்சி காலத்தில் இருந்து தற்போதுள்ள அரசியல் களங்கள் வரை துரோகத்தால் வீழ்ந்த வரலாறுகள் நீண்டு கொண்டே செல்கிறது.  நாம் இன்னமும் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே தான் இருக்கிறோமே தவிர அதிலிருந்து பாடம் கற்க யாருமே தயாராக இல்லை என்பதே வருத்தத்திற்குரியது. இன்னமும் அது தொடருமானால் தமிழினத்தின் அழிவு தமிழ் மக்களின் கைகளிலே தான் உண்டு. முறையான ஆவணப்படுத்தலின்மையும், வரலாற்று தெளிவின்மையுமே இந்த தொடர்ச்சிக்கு காரணம். எனவே தான் இந்த அதிநவீன யுகத்தில் ஆவணப்படுத்தல் தவிர்க்கமுடியாததாக உள்ளது. எதிர்கால சந்ததியை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல ஆவணப்படுத்தல் அவசியமாகிறது. 

இன்றைக்கு பல தொழில்நுடப் வளர்ச்சி உச்சம் தொட்ட காலத்தில் கூட பல இனங்கள் அழியும் நிலையில் உள்ளது. தங்களுடைய கலாசாரங்களை மறந்து அந்நிய கலாசார மோகத்திற்கு அடிமையானதே இதற்கு காரணம் ஆகும். திட்டமிட்டே அந்நிய காலச்சரங்கள் ஊடுறுவ செய்யப்படுகின்றது. அவ்வாறு அந்நிய கலாச்சாரத்திற்குள் மூழ்கும் இளந் தலைமுறைகள் தமது சொந்த கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் தொலைத்துவிடுகின்றனர். தனது சொந்த வரலாற்றை படிக்க மறந்த ஒரு இனம் காலப் போக்கில் காணாமலே போய்விடும். கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் இருந்தே நிறைய பாடங்களை படிக்க முடியும். வரலாற்றை ஆவணப்படுத்தல் என்பது எந்தவொரு இனத்திற்கும் பொதுவானது ஆகும். இன்றைய கால கட்டத்தில் ஆவணப்படுத்தலுக்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எந்தவொரு பாமரமனிதனும் எப்படிப்பட்ட ஆவணங்களையும் ஆவணப்படுத்தி வைக்க முடியும். இதற்கு பிரத்யேகமான எந்தவொரு பெரியளவிலான தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் தலைமுறைகள் கடந்தும் எமது இலக்கிய மரபுகளை எடுத்து செல்லமுடியும். எத்தனை நூற்றாண்டுகளாயினும் அதனை தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் இடத்தில் பார்வையிட முடியும். அடுத்த சந்ததிக்கு மிகவும் பயனுள்ள முறையில் கையளிக்க முடியும். இணையத்தில் இருக்கும் ஆவணங்களை எந்த மொழியிலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு கணப் பொழுதில் பார்வையிட கூடியதாக இருக்கும். 

மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பெரும்பாலான நிகழ்வுகள் கூட எமக்கு கிடைக்கப்பெறவில்லை. தமிழினம் தங்கள் சுவடுகளை ஆவணப்படுத்துவதில் எந்தவித ஆர்வம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. கி.பி. 12ம் நூற்றாண்டு, அதாவது சோழரின் இலங்கை வருகையின் பின்னரே பெரும்பாலும் கல்வெட்டுக்கள் மற்றும் செப்புத்தகடுகள் போன்ற சில ஆவணங்கள் பரவலாக கிடைத்திருக்கின்றது. எனினும் காலவோட்டத்தில் பெரும்பாலான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தொடர்ந்து வந்த அந்நியர்களால் திட்டமிட்டு தங்கள் மொழியையும், மதங்களையும் பரப்பும் நோக்கில் தமிழ் சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டது. பல கல்வெட்டுக்களை தாங்கி நின்ற ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இங்கிருந்த சில தனித்துவமான பொருட்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழரும், தமிழர் பிரதேசமும் சாரந்த வரலாற்று பதிவேடுகள் ஈழத்தில் உள்ளதை காட்டிலும் லண்டன், நெதர்லாந்து, லிஸ்பன் போன்ற நாடுகளில் அதிகளவு காணப்படுகின்றது. அந்நியராட்சி காலத்தில் கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் இன்னமும் மேலைத்தேய நாடுகளில் பாதுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு பெரும்பாண்மை இனத்தவர்களால் தமிழர் வாழ்விடங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது. பல ஆண்டுகள் அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாத்து வந்த தொண்மையான ஆவணங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டது. இது மீண்டுமொரு முறை நடக்காது என்பது உறுதியின்மையால் எமது வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டியது எம்முடைய கடமையாகும். இறந்தகால அனுபத்தினூடாகவே நிகழ்காலத்தில் தவறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனின் முதலில் அவர்களின் வரலாற்றை அழிக்கவேண்டும். பின் அவர்கள் சார்ந்த ஆவணங்களை அழித்தால் அந்த இனம் தன்னை தானே அழித்துக் கொள்ளும். முன்னோர்களின் வழிகாட்டல்கள் இல்லாத தலைமுறை நிலைகுலைந்து போகும். இதற்கு உதாரணமாக யாழ்ப்பாண நூலகத்தை எடுத்து கொள்ளலாம். நம் கண்ணெதிரே நடந்தேறிய பெரும் வரலாற்று அழிப்பு. 1981 வைகாசி 31 நள்ளிரவு சில வி~மிகளால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு தொடர்ந்து இரண்டு தினங்களாக எரிந்து கொணடிருந்தது. தென்னாசியாவில் மிகப்பெரிய மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பல அரிதான நூல்கள், சுவடிகள் பலவற்றை கொண்டு தமிழரின் மிக பெரிய வரலாற்றை தன்னகத்தே வைத்திருந்த இந்த நூலகம் ஆனி மாதம் 2ம் திகதி எந்த எச்சங்களும் மிச்சமின்றி மறைந்து போனது. யாழ் நூலக எரிப்பை பற்றி தனித் தொகுப்பாக அடுத்தடுத்த பதிவுகளில் இடப்படும். இந்நிகழ்வு தமிழினத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். எரிக்கப்பட்டது ஒரு நூலகம் மட்டுமல்ல பல தலைமுறைகளாக சேர்த்து வைத்த அரிதான பொக்கி~ங்கள். தற்போதுள்ள தலைமுறைக்கு அந்த நூல்களைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது. எஞ்சியுள்ள ஆவணங்களையேனும் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைகக் வேண்டிய தேவை உள்ளது.  

உலகில் செம்மொழிகளென சிறப்பு பெற்றது தமிழ், சமஸ்கிருதம், சீனமொழி, அரபிக், கிரக்கம், லத்தீன் மொழிகள் ஆகும். அதில் தமிழும் இடம்பெற்றிருப்பது நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும். செம்மொழி என்பது மிக பழமையான இலக்கிய மற்றும் கலைப்படைப்புக்களை முதன்மையாக வைத்தே தீர்மானிக்கப்டும். அந்த வகையில் தமிழும் முதன்மை பெறுகிறது. பல மொழிகளுக்கு கிடைக்காத அந்த தகுதி தமிழ் மொழிற்கு கிடைத்துள்ளது. இத்தனை பெருமைகளை கொண்ட தமிழ் இன்று தன் பொழிவை இழந்துள்ளது. இதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். ஒழுங்கான ஆவணப்படுத்தலின்மையால் இன்றுவரை பல பெறுதியான இலக்கிய, கலை படைப்புக்களை தமிழ் சமூகம் இழந்துள்ளது. மீதமுள்ள படைப்புகளையேனும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழும் தமிழர் சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும். தமிழின் இத்தனை சுவைகளையும் அனைவரும் அறியவேண்டும். எமது கடந்தகால வரலாற்றையும் போரினால் நாமடைந்த இன்னல்களையும், ஆறாத வடுவாய் தமிழ் நெஞ்சங்களில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பையும் அடுத்த தலைமுறை எடுத்து சொல்ல வேண்டியது கடமையாகும். இல்லையேல் இப்படி ஒரு இனம் இருந்தது என்பதற்கான சான்றுகளே இலலாமல் போய்விடும்.

தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் தமிழ் இனி மெல்ல சாகும். ஏற்கனவே தமிழ் சமூகம் அழிவை நோக்கி செல்கையில் எமது வரலாற்றையும் மறந்தோமெனில் தமிழ் என்ற சமூகமே பாரினில் இருக்காது. தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலமே தமிழரின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். சின்ன சின்ன பதிவுகளை கூட ஆவணப்படுத்தி வைப்பதால் பிற்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும். தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். தொழில்நுட்ப உதவியுடன் நம்மால் எதையும் சாதித்து கொள்ள முடியும். தற்போது பத்திரிகைகளாக, நூல்களாக இருப்பவற்றை இனையத்தில் மென்பிரதியாக சேமித்துகொள்ள முடியும். அதனை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பாவித்துக் கொள்ளமுடியும். காகிதங்களை எளிதில் அழித்துவிட முடியும் ஆனால் இணையத்தில் உள்வற்றை அவ்வாறு எளிதில் அழிக்கமுடியாது.    

 

“தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம்”  

  


Comments

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்