சேப்பியன்ஸ் - மனித குலத்தின் சுருக்கமான வரலாறு
இஸ்ரேலை சேர்ந்த வரலாற்று முனைவர் யுவால் நேவா ஹராரி உலக வரலாறுகள் குறித்து பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். சேப்பியன்ஸ் நூலில் மனித வளர்ச்சியும் அதன் வரலாற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நூல் 33 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே சமயம் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஒன்றுமில்லாத சாதாரண உயிரனமாக இருந்த சேப்பியன்ஸ் எவ்வாறு இந்த உலகையே ஆட்டி வைக்கும் சக்தியாக மாறினான் என்பதை இந்த நூல் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கூறுகிறது. அதேவேனை நம்மையும் சிந்திக்க வைக்கிறது. நம்ப முடியாத பல தகவல்களையும், புரியாத விடயங்களை பாமர மக்களுக்கும் விளங்கும் படியாக எளிய உதாரணங்கள் மூலம் ஹாரரி விளக்கியுள்ளார். நம்முள் இருக்கும் உலகம் சார்ந்தும், மனித குலம் சார்ந்தும் இருக்கும் பல கேள்விகளுக்கு விடை காணும் நூலே சேப்பியன்ஸ். குரங்கில் இருந்து வந்த மனிதன் எவ்வாறு இந்த உலகை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான் என்பதை மிகச் சுருக்கமாக ஒவ்வொரு படிநிலைகளை தெளிவாக கூறுவதே இந்த நூல். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனித குல ஒருங்கிணைப்பு மற்றும் அறிவியல் புரட்சி என்ற நான்கு பிரதான தலைப்புக்களில் 20 அத்தியாயங்கள் உள்ளடங்கலாக இந்த நூல் உருவாகியுள்ளது.
இந்த நூலின் முதல் பகுதி அறிவுப் புரட்சியை பற்றி கூறுகிறது ஹோமோ பேரின வகையில் உள்ள ஒரு வகை தான் சேப்பியன்ஸ். நியண்டதால், எரெக்டஸ் போன்ற இன்னும் சில வகையான இனங்களும் இருந்துள்ளன. ஆயினும் காலப்போக்கில் மற்ற இனங்கள் எல்லாம் அழியவே சேப்பியன்ஸ் மட்டும் தாக்குபிடித்து வருகின்றனர். மற்ற மனித இனங்களின் மறைவுக்கு சேப்பியன்ஸ் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இனக்கலப்பு, மாற்றீட்டு கோட்பாடு எனும் இரண்டு கோட்பாடுகளை கொண்டு விளக்குகின்றனர். இனக்கலப்பு என்பது சேப்பியன்ஸ் நியண்டதால் மக்களின் எல்லைக்குள் சென்று அவர்களுடன் புணர்தனர். மாற்றீட்டு கோட்பாடு என்பது நியண்டதால் நிலப்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சேப்பியன்ஸ் அவர்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர். இதனால் காலப்போக்கில் நியண்டதால் இனம் உலகை விட்டே சென்றுவிட்டது. நியண்டதால் மட்டுமல்ல சில உயிரனங்களும் உலகத்தை விட்டு செல்ல நேர்ந்தது. ஆரம்பத்தில் உணவுச் சங்கிலியின் நடுவில்தான் சேப்பியன்ஸ் இருந்துள்ளனர். சில காலங்களிலேயே உணவுச் சங்கிலியின் உச்சநிலைக்கு சென்றுவிட்டான். மனிதனை மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்துவது அறிவு தான். மரபணுச் சிதைவால் அறிவியல் வளர்ச்சியடைந்த சேப்பியன், புனைவு கதைகள், கடவுள், மதம், மொழி போன்ற வரையறைகளை உருவாக்கி கொண்டான். மொழி மூலம் தன் இனத்தை சேர்ந்தவருடன் தனது எண்ணங்களை அவனால் பரிமாறி கொள்ள முடிந்தது. நாடோடியாக திரிந்த காலத்தில் தான் மனித வாழ்வின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புக்களிள் ஒன்றான நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நெருப்பை கண்டுபிடித்த சேப்பியன் உலகின் சகல ஆற்றல்களையும் தன்னுள் அடக்கும் வலிமையை பெற்றான். வேட்டையாடிய உணவுகளை சமைத்து உண்ணவும், குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் நெருப்பு பயன்பட்டது.
இரண்டாம் பகுதி வேளாண் புரட்சி, வேளான் புரட்சி மனித குலத்தை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல எடுத்து வைக்கபட்ட முதல் அடியாகும். சுதந்திரமாக வேட்டையாடி தனக்கான இரையை தேடி திரிந்த சேப்பியன் ஒரு இடத்தில் தங்கி இருந்து தனக்கு தேவையானவற்றை தானே உருவாக்கினான். வேட்டையாடியில் இருந்து விவசாயியாக மாறிய சேப்பியன்ஸ் அதற்காக சில விலைகளை கொடுக்க வேண்டி இருந்தது. அதில் முக்கியமானது ஓடி திரிந்து பழக்கப்பட்ட கால்கள், மரத்திற்கு மரம் தாவி பிடித்த கைகள் எல்லாம் பெரும்பாலும் ஓய்வை பெற்றன. மனிதன் மூட்டு பிரச்சினை, முதுகெலும்பு பிரச்சினை, குடல் இறக்கம் போன்ற நோய்களுக்குள் சிக்குப்பட்டான். கோதுமை, நெல் போன்றவற்றை பயிரிட்டான். காளைகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளை கால்நடைகளாக பழக்கப்படுத்தினான். நாடோடி வாழ்க்கையில் இருந்து வேளாண் புரட்சிக்கு மாறிய சேப்பியன் சில சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சனத்தொகை அதிகரிக்க தொடங்கியது. அதனால் வேளாண்மை அதிகரிக்க வேண்டிய தேவை உருவானது. வேளாண்மைக்கும், தங்கி வாழ்வதற்கும் அதிகளவான இடங்களும் தேவைப்பட்டது. சிறுசிறு தொகுதிகளாக இருந்த சேப்பியன்ஸ் கூட்டமாக சேர்ந்து வாழ தொடங்கினான். தானியங்களை அறுவடை செய்ய அரிவாள்களையும், அதை மாவாக்க கற்குழவிகளையும் சேப்பியன்ஸ் உருவாக்கி கொண்டான். எழுத்துக்கள் பிறந்ததும் இந்த வேளாண் புரட்சியில் தான். வேளாண்மை அதிகரிப்பால் தானியங்கள், கால்நடைகளின் எண்ணிக்கையை குறித்து வைக்க எழுத்துக்கள் பிறந்தன. இந்த எழுத்துக்கள் குறியீட்டு வடிவில் குறிக்கப்பட்டது. எழுத்துக்களை எழுத தேவையான உபகரணங்கள் தோற்றம் பெற ஆரம்பித்தது. அன்று களிமண் தகடுகள், ஓலைகள் என தேடல் தொடர்ந்து தற்போது கணினி வரை வந்துள்ளோம். ஒரு கட்டத்தில் வேளாண்மை தவறான தீர்மானம் என கருதிய சேப்பியன்ஸ் மீண்டும் நாடோடி வாழ்க்கைக்கு செல்ல யோசித்தாலும் அது முடியவில்லை. காரணம் அதிகரித்த மக்கள் தொகை தான்.
மூன்றாவது பகுதி மனித ஒருங்கிணைப்பு, வேளாண் புரட்சியில் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த மனித சமுதாயம் தங்களுக்கு அருகில் இருந்த மற்ற கூட்டங்களுடன் இணைந்து வாழ தொடங்கினான். ஆரம்பத்தில் அருகில் இருந்த சமூகங்களுடன் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை பண்டமாற்று முறையில் பரிமாறி கொண்டான். இலக்கங்கள், எழுத்துக்கள் தோன்றிய பின்னர் தன்னுடைய பொருட்களுக்கு விலைகளை நிர்ணயித்தான். அப்போது தான் பணம் பிறந்தது. தற்போதுள்ளவை போன்ற தாள்களை பயன்படுத்தவில்லை அவர்களுக்கு இலகுவில் கிடைத்த கற்கள், சிறு பலகைகள், கடற் சிப்பிகள் போன்றவற்றை பயன்படுத்தினர். அவ்வாறு உருவான பணம் எனும் குழந்தை தான் தற்போது மிகப்பெரிய அசுரனாக வளர்ந்து நிற்கிறது. பல கூட்டங்களாக இருந்த மக்கள் ஒன்றித்து வாழ தொடங்கிய சமயத்தில் அவர்களுக்குள் பிரச்சினைகள் எழவே அதை தீர்த்து வைக்க பொதுவான நபர் ஒருவர் தேவைப்பட்டார். அவரையே பின்னர் நாம் அரசர் என்று அறிகிறோம். இவ்வாறு பல பேரரசுகள் தோற்றம் பெற்றன. வேளாண் புரட்சியில் கண்ணுக்குத் தெரியாத இடி, மின்னல் எனபவற்றை வழிபட்ட மனித இனம், பின்னைய காலங்களில் உருவ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதிலிருந்தே மதம் தோற்றம் பெற்றது. ஒவ்வொரு காலகட்டத்தில் யாரேனும் தோன்றி மதம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தால் அவர்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர்.
இறுதியாக அறிவியல் புரட்சி, சேப்பியன்ஸ் வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகும். கி.பி 1000 ஆண்டில் தூங்கிய ஒருவர் 500 ஆண்டுகளின் பின் எழுந்தால் அவரால் பெரியளவில் எந்த மாற்றத்தையும் காணமுடியாது. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் உறக்கத்திற்கு சென்று 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்தால் அவரால் விளங்கிக் கொள்ள முடியாத பல மாற்றங்கள் நடந்திருக்கும். ஒரு கடிதத்திற்காக பல மாதங்கள் காத்திருந்த காலம் போய் உலகையே மனிதன் கையில் வைத்து கொண்டிருப்பான். உலகில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு பதில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதுவே அறிவியல் புரட்சியின் அதீத வளர்ச்சி. இந்த வளர்சியானது வேளாண் புரட்சியை போன்று நீண்ட காலம் எடுக்கவில்லை. குறுகிய காலத்தில் தன் உச்சநிலையை எட்டியுள்ளது. அறிவியல் புரட்சியின் விளைவாக இதுவரை காலமும் தரைக்குள் தன்னை வரையறுத்துக் கொண்ட சேப்பியன்ஸ் கடல்களுக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை தேட தொடங்கினான். அதன் விளைவாக பல புதிய நாடுகள் தோற்றம் பெற்றன. தாங்கள் கண்டுபிடித்த நாடுகளை தங்கள் தங்கள் நாட்டுடன் இணைத்தனர். நாடுகளை கைப்பற்றிய காலம் மாறி கிரகங்களை கைப்பற்றும் நோக்கில் மனித சமுதாயம் தனது பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. அதிகரித்த சனத்தொகை, மனித தேவைகள் போன்றவற்றின் காரணமாக மனித இனம் வேகமாகவும் அதேநேரம் வினைத்திறனுடனும் இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இயந்திரங்களின் தேவை அதிகரிக்க பல புதிய கண்டுபிடிப்புக்கள் தோற்றம் பெற்றன. இந்த வளர்ச்சி, கண்டுபிடிப்புக்கள் எல்லாம் மனித குலத்தை துயர கடலில் மிதக்க விடாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே என கூறினாலும். வேட்டையாடி சமூகத்தில் இருந்த ஒரு சேப்பியனை விட நவீன உலகத்தில் வாழும் சேப்பியன் எந்தவிதத்திலும் சிறப்பான வாழ்க்கையை வாழவில்லை என்பது உண்மை.
மேற்படி நான்கு பகுதிகளிலும் சேப்பியன்ஸ் இன் தோற்றத்திலிருந்து அவன் கடவுளாக மாறியது வரை யுவால் நோவா ஹராரி மிகச் சிறப்பாக, தெளிவான உதாரணங்களுடன் கூறியுள்ளார். எளிதில் எல்லா வகையான வாசகர்களுக்கும் புரிய கூடிய வகையில் உள்ளமை சிறப்பான விடயமாகும். இது ஒரு வரலாற்று புத்தகம் என்பதை விட மனித குலத்தின் சுயசரிதை என கூறினால் மிகையல்ல. புத்தகத்தின் முன் அட்டையில் எழுதப்பட்டுள்ளது போல இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி விட்டால் அதை முடிக்காமல் இடையில் நிறுத்துவது கடினமானது தான். அவ்வளவு சுவாரசியமாக செல்லும் ஒவ்வொரு அத்தியாயமும். இந்த நூல் வாசிப்பு அனுபவத்தை மட்டும் கொடுக்கவில்லை எம்மை சற்று சிந்திக்கவும் வைக்கும். எமக்கு தெரியாத தகவல்கள் ஏராளம் இதில் உள்ளடங்கியுள்ளது. நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் ஆகும். வேகமாக முன்னேறி வரும் சேப்பியன்ஸின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வியுடன் இந்த புத்தகம் நிறைவுக்கு வருகிறது.
Comments
Post a Comment