த டாவின்சி கோட்
2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத் துப்பறிவுப் புனைவு நாவலாகும். இவர் த்ரில்லர் வகை நாவல்களை எழுவதில் கைதேர்ந்தவர். இவருடைய நாவல்கள் அனைத்துமே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் விற்பனையாகி வருகிறது. இவருடைய நாவல்களில் அறிவியல், கலை, வரலாறு மற்றும் சமய மரபுகள் என்பன முக்கிய இடம்பெற்றிருக்கும். நுட்பமான எழுத்துக்களால் வாசகர்களை தம்வசப்படுத்திவிடுவார். இவருடைய படைப்புக்களில் த டாவின்சி கோட் மிகப்பிரபலமானது. உலகமெங்கும் இதுவரை 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப் புத்தகமாகும். அத்துடன் 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துப்பறிதல், திகில் மற்றும் அறிவியலுடன் ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் கதை நகர்கிறது. இந்நாவல் பிரவுனின் இரண்டாவது நாவலாகும். அவரது முதலாவது நாவல், 2000 ஆண்டு வெளிவந்த நாவலான ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ் ஆகும். 2006 இல், இந்நாவல் த டாவின்சி கோட் எனும் பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கால கட்டத்தில் அதிக வசூலை செய்த படமாகவும் டாவின்சி கோட் இருந்துள்ளது. இதுவும் திரைப்படமாக வந்தாலும் நாவலில் கூறப்பட்ட பல விடயங்கள் திரைப்படத்தில் காட்டப்படவில்லை. இப்புத்தகம் அதன் இலக்கிய மதிப்பு மற்றும் வரலாற்றைச் சித்தரித்துள்ள விதம் குறித்த எண்ணற்ற நேர்மறையான கருத்துக்கள் வந்த போதும், விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே இந்த நாவலை பலரும் நேர்மறையாக விமர்சனம் செய்தனர். இந்த நாவலின் கதை சுவாரஸ்யமானது எதிர்பாராத இடங்களில் ஏற்படும் திருப்பங்கள் நாவல் மேல் உள்ள ஆவலை அதிகரிக்கிறது.
இக்கதை பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியத்தில் ஆரம்பிக்கிறது. சிலாஸ் என்ற மர்ம நபர் ஒருவரால் அருங்காட்சியகக் காப்பாளரான ஜாக்ஸ் சோனியர் கொல்லப்படுகிறார். அவருடைய உடல் லியனார்டோ டாவின்சியின் பிரபல வரைபடமான விட்ரூவியன் மேன் போல் நிர்வாணமாக கிடக்கிறது. அவருடைய இரத்தத்தாலேயே அவருக்கு அருகிலேயே மர்ம குறிப்புக்கள் சில காணப்படுகின்றன. பெக்கே எனும் அதிகாரி சோனியரின் கொலை பற்றி விசாரிக்க வருகிறார். பெக்கேவிற்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மதக் குறியீட்டு முறைவியல் பேராசிரியராக உள்ள ராபர்ட் லாங்டனின் மீது சந்தேகம் ஏற்படவே அவரை கொலை நடந்த இடத்திற்கு வரவைக்கிறார். இடையில் பொலீஸ் அதிகாரி என கூறி அருங்காட்சியத்திற்குள் வரும் ஜாக்ஸ் சோனியரின் பேத்தி சோபியா நெவ்யு லேங்டனை தனியா அழைத்து பிரான்ஸ் பொலிஸ் லேங்டனை கொலை குற்றவாளியாக சந்தேகப்படுவதை தெரியப்படுத்துகிறார். லேங்டன் மற்றும் சோபியா பொலீஸ் அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி அவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோனியரின் உடலின் அருகில் இருந்த மர்ம குறியீடுகளை பற்றி ஆராய்கிறார்கள். அந்த குறிப்புக்கள் லியானோ டாவின்சியின் அற்புத படைப்பான மோனாலிசா ஒவியத்தை குறிக்கிறது. லேங்டன் மற்றும் சோபியா இருவரும் மோனாலிசா ஓவியத்தை நோக்கி செல்கின்றனர். அந்த ஓவியத்திலும் ஏராளமான எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் காணப்படுகிறது. குறியீட்டுவியல் பேராசிரியரான லேங்டனும் சோபியாவும் அந்த குறியீடுகளின் உண்மை அர்த்தத்தை கண்டுபிடிக்கின்றனர். அதன் விளைவாக அது டாவின்சியின் இன்னொரு ஓவியத்திற்கு அழைத்து செல்கிறது. அவர்களுக்கு அந்த ஓவியத்தில் ஓரு திறவுகோல் கிடைக்கிறது. அதுவே அவர்கள் தேடும் மர்மத்திற்கான விடையை கொடுக்கப் போகிறது. சோனியர் எந்த ரகசியத்தை பாதுகாக்க தன் உயிரை கொடுத்தாரோ அந்த ரகசியத்திற்கான வழியை அந்த திறவுகோல் காட்டும். அந்த திறவுகோலை எடுத்தவுடன் வெளியே சென்ற பொலீஸ் திரும்பி வரவே லேங்டனும் சோபியாவும் அருங்காட்சியகத்தை விட்டு தப்பிச் செல்கின்றனர்.
சிலாஸ் உம் தன் எஜமானுக்காக அந்த சாவியை தேடும் பணியில் பலரை கொலை செய்கிறான். அதேநேரம் தான் செய்யும் தப்புக்களுக்காக இயேசுவிடம் தன் உடலை வருத்தி மன்னிப்பும் கேட்கிறான். அருங்காட்சியத்தில் இருந்து தப்பித்து அந்த சாவியை பற்றி இருவரும் ஆராய்கிறார்கள். இறுதியில் அது பெட்டகத்தின் சாவி என்று அறிந்து கொள்கின்றனர். அந்த பெட்டகம் உள்ள வங்கி கணக்கின் இலக்கத்தை சோனியர் டாவின்சியின் ஓவியத்தில் மர்ம குறிப்பீட்டில் எழுதியிருந்தார். லேங்டன் மற்றும் சோபியா இருவரும் அந்த இலக்கங்களை ஒழுங்கமைத்து வங்கி கணக்கின் இலக்கத்தை கண்டறிகின்றனர். அந்த பெட்டகத்தில் இருந்து ஒரு கற்சாவியை எடுக்கின்றனர். அதிலும் சில புதிர்கள் விடப்பட்டுள்ளன. கிரிப்டெக்ஸ் எனும் கற்சாவியை வலுக்கட்டாயமாக திறந்தால் உள்ளே பொதித்து வைக்கப்பட்ட வினிகரின் குழல் ஒன்று உடைந்து பாபிரஸின் மேல் எழுதி வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அழித்துவிடும். இருவரையும் துரத்தி வந்த பொலீசார் வங்கிக்கும் வரவே லேங்டனும் சோபியும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். இருவரும் லேங்டனின் நண்பரும், புனித கோப்பை தொடர்பான ஆராய்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பனித்த டீபிங் லீ யின் வீட்டிற்கு செல்கின்றனர். புனித கோப்பை ஆராய்ச்சியில் பல ஆண்டுகளை கழித்த லீ க்கு கற்சாவியை கண்டதும் வாழ்நாள் இலட்சியத்தை அடைந்த உணர்வை பெற்றார். புனித கோப்பை மற்றும் அதன் இரகசியங்கள் பற்றிய விளக்கங்களை லீ, சோபியாக்கு விளக்குகிறார்.
புனிதகோப்பை என்பது ஒரு பொருள் அல்ல அது ஒரு பெண்னை குறிக்கிறது. நாவலில் சோபியாவிடம் லீ டீபிங், லியோனார்டோ டா வின்சியின் "இறுதி இராப்போசனம்" ஓவியத்தில் இயேசுவுக்கு வலது பக்கத்தில் இருப்பது அப்போஸ்தலர் யோவான் அல்ல, அது மக்தலின் மரியாள் என விளக்கமளிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மனைவியே மக்தலின் என்றும், இயேசு சிலுவையில் அறையப்படுகையில் அவருடைய குழந்தையை கர்ப்பத்தில் வைத்திருந்தாகவும் கூறுகிறார். அதற்கு சான்றாக இருவரினதும் உடையின் ஒற்றுமையை சுட்டிகாட்டுகிறார். அதே நேரத்தில் இறுதி இராப்போசனம் ஓவியத்தை பாதியாக்கி இடமாற்றி காட்டுகிறார், இயேசுவையும் மக்தலினையும் பார்க்கும் பொழுது கணவன் மனைவியை போன்றே இருக்கும். இயேசு பிறந்து 1000 ஆண்டுகளிற்கு பிறகு வந்த ஓவியர் தான் லியானோ டாவின்சி. அவ்வாறு இருக்கையில் அவரால் எவ்வாறு இந்த ஓவியத்தை உண்மை என்று நம்பமுடியும் என சோபியா லீ யிடம் கேட்கிறாள். அதற்கு கிறிஸ்தவ மதத்தை உலகம் முழுவதும் பரப்ப கான்ஸ்டைன் என்ற இளவரசன் காலத்தில் உருவாக்ப்பட்ட பைபிள் தான் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும், கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற நிகழ்வுகள் எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என லீ சொல்கிறார். அந்த காலப்பகுதியில் தான் இயேசு சாதாரண மனிதர் அல்ல அவர் ஒரு கடவுள் என சொல்கிறார்கள். கான்ஸ்டைன் காலத்தில் இயேசு கடவுள் என நம்பியவர்கள் இணைந்து உருவாகிய பைபிளில் இருந்து மேரி மக்தலின் பற்றியும், அவர் தான் இயேசுவின் மனைவி என்ற வாசகங்களையும் நீக்கியதாக லீ சொல்கிறார். இவர்களிற்கு இடையில் இந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்க சிலாஸ் அந்த கற்சாவியை தேடி வருகிறான். சிலாஸை பிடித்து கட்ட, பொலீஸ் அவ்விடத்திற்கு வருகின்றனர். லேங்டன், லீ மற்றும் சோபியா மூவரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். அவர்களின் மர்ம குறியீடுகளை துலக்கியதில் அவர்கள் தேடுவது லண்டனில் இருப்பது தெரியவரவே மூவரும் லீ யின் ரகசிய விமானம் மூலம் இலண்டன் செல்கின்றனர். இவ்வளவு தூரமும் லேங்டனின் நண்பராக இருந்த லீ, இயேசு கடவுள் அல்ல சாதாரண மனிதர் தான் என்பதை உலகத்திற்கு தான் தான் சொல்லவேண்டும் என்ற ஆசையில் கற்சாவியை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு செல்கிறார். பிறகு லேங்டன் இலண்டனில் தாங்கள் தேடி வந்த இடம் சேர் ஐசாக் நியூட்டனின் கல்லறை தான் என்பதை அறிந்துகொள்கின்றனர். நியூட்டனும் சிலுவை மடத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார். சிலுவைமடம் என்பது இயேசு மற்றும் மக்தலின் பற்றிய மர்மங்களை பாதுகாக்கும் ஓரு அமைப்பு. நியூட்டன் மட்டுமல்ல டாவின்சியும் சிலுவை மடத்தில் அங்கமாக இருந்துள்ளார். அந்த வழியில் வந்தவர் தான் சோனியர் இந்த மர்மங்களை அறிந்து கொள்ளவே சோனியர் கொல்லப்பட்டுள்ளார். நியூட்டனின் கல்லறைக்கு சென்ற லேங்டன் மற்றும் சோபியா அங்கு லீ யை காண்கின்றனர். லீ அவர்களை மிரட்டி அந்த கற்சாவியை திறக்கும் மர்ம குறியீட்டை கேட்கிறார். லீ டீபிங் தான் சோனியரைக் கொல்ல சிலாசை அனுப்பியவர் என்பது தெரியவருகிறது, அவரிடம் சிலுவை மட தலைவர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல் இருப்பதாகவும், அவர் தான் அவர்களது அலுவலகங்களை வேவு பார்த்து அவர்களைக் கொல்ல சிலாசை நியமித்ததாகவும் தெரியவருகிறது. ரெமி அவருடைய ஒருங்கிணைப்பாளராக இருந்து சிலாசை வழிநடத்தியுள்ளார்.
கற்சாவி கிடைத்த பின் இனி சிலாசின் உதவி தேவைப்படாது என்பதால் அவன் ரகசியமாக ஒழிந்திருக்கும் இடத்தை போலீசுக்கு தெரிவிக்கிறார். அடுத்து சிலாசை வழிநடத்தும் ரெமி. ரேமி தான் சிலாஸ் மற்றும் லீ யை இணைக்கும் ஒரேயொருவர் எனவே தன் தவறுகளின் தடத்தை இல்லாமல் செய்ய, ரெமிக்கு ஒவ்வாமை இருப்பதை அறிந்து ஒரு பொருளுடன் போதைப் பொருளை கலந்து ரெமிக்கு கொடுத்து அவனைக் கொல்கிறார் டீபிங் லீ. அதற்கிடையில் லீ தான் குற்றவாளி என தெரிந்து பொலீஸ் அவரை கைது செய்கிறார்கள். அதற்கு முன் கற்சாவியை லேங்டனிடம் கொடுத்து அதை திறக்க சொல்கிறார். புதிரை தீர்த்து ரகசியத்தை தெரிந்து கொண்ட லேங்டன் அந்த கற்சாவியை எறிந்து உடைத்து விட்டு உள்ளே இருந்த இரகசியம் அழிந்துவிட்டதாக கூறுகிறார். அந்த கற்சாவியில் இருந்து ஒரு கடதாசி கிடைக்கிறது. அந்த கடதாசில் ஒரு தேவாலாயம் குறிப்பிடப்பட்டுள்ளது. லேங்டனும் சோபியும் அந்த தேவாலயத்திற்கு செல்கின்றனர். அந்த தேவாலயத்தில் தான் அனைவரும் தேடும் இரகசியம் கிடைக்கிறது. என்ன இரகசியம் அது? பதில் புத்தகத்தில்.
இந்த நாவலில் மறைமுக நாயகனாக வருபவர் லியானாடோ டாவின்சியே. நாவலின் தலைப்பே அதை தெளிவாக சொல்லும். இந்த கதை முழுவதும் இவருடைய ஓவியங்களில் உள்ள மர்மங்களை பற்றியே நகர்கிறது. கதை என்பதை தாண்டி இவருடைய ஓவியங்கள் வெறுமனே ஓவியங்கள் மட்டுமல்ல. அதில் பல உட்கருத்துக்கள் பல உண்டு என தற்போதுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மோனாலிசா ஓவியம் எழுத்துக்களால் உருவாக்கபட்டதா என்றும் மிரர் ரைட்டடிங் எனும் எழுத்து முறை உள்ளதாகவும் சந்தேகங்கள் நிலவுகின்றன. அவரது விட்ருமன் மேன் எனும் ஓவியம் மனித உடலின் துல்லியமான விகிதங்களை வைத்து வரையப்பட்டது. இவ்வாறு பல மர்மங்களை வரைந்த ஓவியரே இந்த கதையில் முக்கிய இடத்தை பிடிக்கிறார். ஒவியர் மட்டுமல்ல அவருடைய ஓவியங்களையும் சிறந்த முறையில் விளக்கியுள்ளார் டான் பிரவுன். எவ்வளவு எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தாலும் டாவின்சியின் கோட் எனும் நாவல் இன்னமும் பல நாடுகளில் அதிகளவு விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கிறது. திரைப்படம் வந்தாலும் இந்த நாவலை வாசிப்பதற்கான ஆவல் மட்டும் குறையவில்லை.
Comments
Post a Comment