சிவகாமியின் சபதம்

இருபதாம் நூற்றாண்டில் கல்கி எமக்காக விட்டுச் சென்ற காவியங்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் இன்று கல்கியின் பிரமாண்ட படைப்புக்களில் ஒன்றான சிவகாமியின் சபதம் என்ற நூலை பற்றி பாரக்க உள்ளோம். இந் நாவலும் கல்கி அவர்களின் ஆகச்சிறந்த படைப்புக்களில் ஒன்று ஆகும். இது 1940 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கல்கி இதழில் வெளிவந்தது. பின்னர் மக்களின் ஈர்ப்பை பெற்றதால் நாவலாக வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் அளவுக்கு சிவகாமியின் சபதம் இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே. பொன்னியின் செல்வனில் சோழர் கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்டு காட்சிகள் மற்றும் கதாப்பத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் பல்லவ கால நிகழ்வுகளின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கால கட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் கல்கி தன் எழுத்துக்களால் நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறார். அதாவது நாமும் ஒரு சோழ தேசத்தவராகவோ அல்லது பல்லவ தேசத்தவாரகவோ மாறிவிடுகிறோம். 

பொன்னியன் செல்வனில் வந்தியத்தேவனை போல இங்கும் ஒரு கதாப்பாத்திரம் கதையை நகர்த்தி செல்கிறது. பரஞ்சோதி, பரஞ்சோதி ஆரம்பத்தில் தஞ்சையில் இருந்து கிளம்பி கல்வி பயில பல்லவ தேசத்திற்கு வருகிறான். இவனின் வருகையுடனே தான் கதை ஆரம்பிக்கிறது. சாதாரண குடிமகனாக ஆயனார் என்ற பல்லவ நாட்டின் தலைமை சிற்பியிடம் சிற்ப கலை பயிலும் மாணவனாக இருந்து பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் படைத் தலைவனாக குறுகிய காலத்திலேயே உயர்கிறான் பரஞ்சோதி. பல்லவ நாட்டின் அரசர் மகேந்திர சக்கரவர்த்தி ஆரம்பத்தில் மாவீரராகவும், சிற்ப கலையில் ஆர்வம் மிக்கவராகவும், மதிநுட்பம் மிக்கவராகவும் காட்டப்பட்டாலும் அவரின் இறுதி காலத்தில் தோல்வியில் துவலுவதாக காட்டப்பட்டுள்ளது. அவருடைய மகன் மால்லர் இளம் பிராயத்திலே போர்களம் சென்றவர். அந்த இளமை துடிப்பில் போர் போர் என்று முழக்கமிட்டாலும் ஆட்சிபொறுப்பை ஏற்றபின் அதற்கான பக்குவத்துடன் காணப்பட்டார். 

இப்பொழுது கதையின் முக்கிய பாத்திரம், கதையின் நாயகி சிவகாமி பற்றி பார்க்கலாம். சிவகாமி ஆயனர் எனும் சிற்பியின் மகள் அத்துடன் நடன மங்கையாக பல்லவ நாட்டையே கவர்ந்திருப்பவள். சிவகாமி தோன்றும் அத்தனை காட்சிகளிலும் கல்கி தன் கற்பனைத் திறனை கொட்டி தீர்த்திருப்பார். சிவகாமி பல்லவ இளவரசர் மாமல்லர் மீது காதல் கொள்ளகிறாள். மாமல்லரும் அவள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளார். இருவரும் சந்திக்கும் இடங்களில் வரும் உரையாடல்களை அருமையான மொழிநடையில் உருவாக்கியிருப்பார் கல்கி. இதற்கிடையில் சாளுக்கிய மன்னன் காஞ்சிக்கு படையெடுத்து வரவே பல்லவ அரசன் முற்றுகையை தடுத்து நிறுத்தினான். அதேசமயம் தெற்கே பாண்டிய மன்னனும் போர் தொடுக்க முயல்கிறான். காஞ்சி கோட்டை மிகக் பலமானதாக சுற்றி அகழிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாதாபி படையால் காஞ்சியின் கோட்டை மதில்களை தாண்டி உள் நுழைய முடியவில்லை. தன் நயவஞ்சக திட்டத்தின்படி பல்லவ மன்னனுக்கு சமானதான தூது அனுப்பினான் புலிகேசி. மகேந்திர பல்லவரும் அதனை ஏற்று புலிகேசியை உபசரித்து கோட்டைக்குள் அழைத்தார். கோட்டையில் இருந்து வெளியேறிய புலிகேசி தன் கோராமுகத்தை காட்டினான். தன் வீரர்களுக்கு கண்ணில்பட்ட அனைத்தையும் அழித்து பொது மக்களை சிறைபிடிக்கவும் ஆணையிட்டான். பல்லவ நாட்டையே நாசம் செய்த வாதாபி படைகள் சிவகாமியை சிறைப்பிடித்து வாதாபிக்கு அழைத்து சென்றனர். இந்த இடத்தில் தான் கல்கி எம்மை அதிசயிக்க வைக்கிறார். நாகநந்தி மற்றும் புலிகேசி இருவரும் சகோதரர்கள் எனவும் உருவத்தில் ஒரே சாயலை கொண்டவர்கள் என்ற உண்மைகளை வாசகர்களுக்கு வெளிப்படுத்துகிறரர். இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலளிக்க சென்ற மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். சாளுக்கிய படைகள் காஞ்சியை கொள்ளையடித்து சென்றுவிடுகிறது.

கைதியாக வாதாபி நகருக்கு அழைத்து செல்லபட்ட சிவகாமி மீது புத்தபிட்சு நாகநந்தி காதல் கொண்டது தெரியவருகிறது. அத்துடன் புலிகேசி மன்னன் வாதாபி அரண்மனையில் பாரசீக வணிகர் முன்னால் ஆடச் சொன்னபோது அவள் மறுத்து விடவே அவளுடன் சிறைபிடித்து வரப்பட்ட ஏனைய பல்லவ நாட்டு மக்களை புலிகேசி துன்புறுத்தினான். அவ்வாறு தன் நாட்டு மக்கள் சித்திரவதைக்கு உள்ளாவதை பொறுக்க முடியமால் சிவகாமி ஆட சம்மதித்தாள். ஆனால் இம்முறை அரண்மனையில் இல்லை மக்கள் கூடும் சந்தியில் ஆடவைத்தான் புலிகேசி. அரண்மனையில் ஆட மறுத்ததிற்கு தண்டனையாக தினமும் தெருவில் ஆட ஆணையிட்டான். ஆட மறுத்தால் பல்லவ மக்கள் மீண்டும் துன்புறுத்தபடுவர். தன் காதலன் நரசிம்ம பல்லவர் வந்து வதாபிநகரை தீக்கிரையாக்கி, புலிகேசியை அழித்து தன்னை விடுவிக்கும் வரை தான் வாதாபி நகரை விட்டு செல்லமாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டால் சிவகாமி. இதுவே நாவலின் தலைப்பாக மாறியது.

காலங்கள் உருண்டோடின. ஒன்பது ஆண்டுகள் கடந்தன. இப்போது நரசிம்மவர்மர் அரசனாக இருந்தார். பாண்டிய இளவரசியை மணந்திருந்தார். ஆனால் அவருடைய மனதில் வாதாபி மீதான படையெடுப்பு பற்றிய எண்ணம் மட்டும் எள்ளவும் மாறவில்லை. இங்கு இவ்வாறு இருக்க வாதாபியில் புலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து இருந்தன. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் பல்லவ படை வாதாபியை முற்றுகையிட்டது. திடீர் தாக்குதலை எதிர்பாராத புலிகேசியால் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை. இதனால் அவன் மரணமடைய நேர்கிறது. இதை அறிந்த நாகநந்தி புலிகேசியின் உடலை எரித்துவி;ட்டு, தான் புலிகேசி போன்று வேடம் தரித்து அரண்மனை சென்றான். புலிகேசி இறந்தாக எண்ணி சரணடைய தயாராக இருந்த படையை போரிட ஆணையிட்டான் புலிகேசி வேடமணிந்த நாகநந்தி. ஆத்திரமடைந்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையாக்க ஆணையிட்டார். அதன்படி பல்லவ வீரர்கள் வாதாபி நகரை தீக்கிரையாக்கி பல்லவ கொடியை பறக்கவிட்டனர். அத்துடன் சிவகாமியையும் விடுவித்தனர். இறுதியி;ல் சிவகாமி இட்ட சபதம் வெற்றியை பெற்றது.. வெற்றியுடன் திரும்பியது பல்வ படைகள். தன் காதலனுக்கு திருமணமானதை அறிந்த சிவகாமி காலமுள்ள வரை காஞ்சி ஏகாம்பரேசுவரருக்கு பணிசெய்வதென முடிவெடுத்தாள். கல்வி பயில வந்து தளபதியாக பதவி உயர்வு பெற்று பல்லவ நாட்டிற்கு பாரிய சேவைகளை செய்த பரஞ்சோதி போர்களங்களில் நடந்த கொடூரங்களை சகிக்க முடியாது என கூறி நாவுக்கரசர் பெருமானுடன் சேர்ந்து இறைபணி செய்;ய தீர்மானிக்கிறான்.

இந்த நாவலில் எவ்வளவத்துக்கு எவ்வளவு காதல் காட்சிகளை கல்கி செதுக்கியிருந்தாலும் அதேசமயம் போர்க் காட்சிகளிலும் தனது கைவண்ணத்தை காட்டியிருப்பார். இன்னும் சொல்வதென்றால் பொன்னியின் செல்வனை விட இதில் வரும் போர்க் களங்கள் பற்றிய விபரணை அதிகமாகவே உள்ளது. இது வாசகருக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது. கதாநாயகனை பலமாகவும், ரசிக்கும் படியும் உருவாக்க வேண்டுமென்றால் கதையில் வரும் வில்லனை சுவாரஸ்யமாக கொண்டு வரவேண்டும். கல்கி அந்த விடயத்தில் எந்தவித தவறையும் விடவில்லை. புலிகேசி என்ற பாத்திரத்தை கல்கி வர்ணிக்கும் விதமே திகிலை உண்டு பண்ணுகிறது. அடுத்து நாகநந்தி எனும் புத்தபிட்சு இவருடைய கதாப்பாத்திரம் இறுதிவரை குழப்பமான பாத்திரமாகவே இருக்கும். நல்;லவரா அல்லது கெட்டவரா என தீர்மானிக்க முடியாமலே நகர்த்தப்பட்டிருக்கும். காதல் மற்றும் போர் அனுபவங்களை பெற கட்டாயம் சிவகாமியின் சபதம் உதவும். இதில் பல்லவ நாட்டின் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என்பன தெளிவாக எடுத்துகூறப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்கள் சிற்பகலை மீது கொண்ட காதலை ஆயனர் என்ற பாத்திரத்தின் மூலம் தெளிவாக காட்டியிருப்பார் கல்கி. தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. இதுவரை யாரும் சிவகாமியின் சபதம் நாவலின் வாசிப்பு அனுபவத்தை தவறவிட்டிருந்தால் உடனடியாக சென்று வாசிக்கவும்.

Comments

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்