கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

வரலாறு நெடுகிலும் பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் தோன்றி தமிழுக்கு அழியா வரம் கொடுத்து வந்துள்ளனர். அந்தவகையில் கடந்த நூற்றாண்டில் நாவல்கள், சிறுகதைகள் என பல பரிமாணத்தில் தன்னை நிரூப்பித்தவர்தான் அமரர் கல்கி கிருஸ்ணமூர்த்தி. சில எழுத்தாளர்களின் மூலம் தமிழே பெருமை கொண்டுள்ளது என்று சொல்லலாம். அதற்கு ஏற்ப சில எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களின் மூலம் காலம் கடந்தும் சாகா புகழ் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் ஒருவர் தான் கல்கி. கடந்த நூற்றாண்டில் பல படைப்பாளிகள் தோன்றி இருப்பினும் கல்கி அவர்களுக்கு எப்பொழுதுமே வரலாற்றில் தனி இடம் உண்டு. தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வந்த இருபதாம் நூற்றாண்டை தனது எழுத்துக்களால் கட்டிபோட்டவர். கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றுள் அமரத்துவம் பெற்று விளங்குவது பொன்னியின் செல்வன் ஆகும்.

வருடங்கள் பல சென்றாலும் மதிப்பு குறையாத ஒரு சில புத்தகங்களில் பொன்னியின் செல்வனும் ஒன்று. எத்தனை முறை வாசித்தாலும் புதிதாக வாசிக்கும் அனுபவத்தையே கொடுக்கும். இந்நாவல் என்னதான் திரைப்படமாக வெளிவந்திருந்தாலும் புத்தகத்தின் மீதான காதலும், ஈர்ப்பும் இன்னும் குறையவில்லை என்பது தவிர்க்கமுடியாத உண்மை. திரைப்படத்தில் இல்லாத நிறைய பாத்திரங்களும், சம்பவங்களும் புத்தகத்தில் உள்ளது. இது புத்தகத்தை வாசித்தவர்களால் விளங்கிகொள்ள முடியும். இந்த நாவல் பல உண்மை நிகழ்வுகளையும், வாசகர்களை தளர்வுறாமல் வைத்திருப்பதற்காக சில கற்பனை நிகழ்வுகளையும் வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டது. இந்த கதை 1950 முதல் 1955ம் ஆண்டு வரையான 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக கல்கி வார இதழில் வெளியிடப்பட்டது. இது வாரா வாரம் வெளிவந்தது என்பதால் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்ப்பார்ப்புடன் முடிவடையும். இதனால் இந்த தொடரின் மீதான ஆர்வம் அதிகரித்தே வந்துள்ளது. இந்த தொடர்கதைக்கு கிடைத்த மக்களின் ஆதரவினால் இது புத்தகமாக வெளியிடப்பட்டது. 

இந்நாவல் ஓர் வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருப்பெற்றிருக்கிறது. கி.பி 1000 ம் ஆண்டு அளவில் இந்திய தேசத்தில் மிகப் பலம் பொருந்திய வல்லரசாக இருந்த சோழ சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டுள்ளது. பாரத கண்டத்தில் பெரிய நிலப்பரப்புகளில் ஆட்சி செய்த சோழர்களின் சாம்ராஜ்யம் மிகவும் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. எனவே இந்த சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்றை எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் கல்கி அவர்கள் குறிபிட்ட சிறியதொரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை வைத்து அதில் தனது கற்பனையை ஒன்றிணைத்து இப் பெருங் காவியத்தை படைத்துள்ளார். 

இந்த நாவலின் தனிச்சிறப்பே பிரம்மாண்டம் தான். ஒரு படத்தை பார்க்கும் போது அதிலுள்ள பிரம்மாண்டத்தை உணர்வது என்பது எளிதானது. ஆனால் வார்த்தைகளினால் பிரமாண்டத்தை காண்பிப்பது, அந்த பிரமாண்டத்தை கண் முன் தோன்ற வைப்பது என்பது மிகவும் கடினமானது. ஆனால் ஆசிரியர் இதை கச்சிதமாக செய்து காட்டியுள்ளார். கல்கி அவர்கள் தனது எழுத்துக்களின் மஜாயாலத்தை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் சிறப்பாக கையாண்டுள்ளார். இந்த கதையில் குறிப்பிட்டுள்ள இடங்கள், நிகழ்வுகள், கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை வார்த்தைகளால் வாசிக்கும் போது அதிலுள்ள வருணனைகளும், வார்த்தைகளின் கோர்வைகளும், அந்த காட்சியை அப்படியே கண் முன்னே நடப்பது போல உணர்வை தருகிறது.

பொன்னியின் செல்வன் இந்த நாவலில் இன்னொரு சிறப்பு கதாப்பாத்திரங்கள். ஒரு கதைக்கு உயிர் தருவதே அந்த கதையின் கதாப்பாத்திரங்கள் தான். இந்த நாவலில் பல கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். அத்தனை கதாப்பாத்திரங்களையும் மிகச் சிறப்பாக கல்கி கையாண்டுள்ளார். இதில் எந்தவொரு கதாப்பாத்திரமும் வெறுமனே வந்துபோவதாக இல்லாமல் கதையின் ஒட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாவல் முழுவதும் வரும் வந்தியதேவனில் இருந்து சில சில இடங்களில் தோன்றி மறையும் ஊமைராணி வரை அத்தனை பாத்திரங்களும் தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறது. இக் கதாப்பாத்திரங்கள் பற்றிய குணாதிசயங்களையும், அவை கதையோடு இணைந்த விதத்தையும், கதையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் தனியொரு படைப்பாக அடுத்த பதிவில் இட முயற்சிக்கின்றேன். 

கண்டராதித்ததேவர், அரிஞ்சயதேவர், சுந்தரசோழர் என பல தலைமுறைகளாக சோழ தேசத்தை உருவாக்கி வந்தாலும் ராஜராஜசோழன் காலத்திலேயே சோழ தேசம் தன் புகழின் உச்சியை  அடைந்தது. இந்நாவலின் கதை சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிகாலத்திலேயே நடைபெறுகிறது. வந்தியதேவனின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது இந்தபயணம். வடக்கில் யுத்த களத்தில் உள்ள ஆதித்ய கரிகாலரின் ஆணைக்கேற்ப சுந்தரசோழருக்கும், இளையபிராட்டிக்கும் ஓலைகளுடன் தஞ்சாவூர் செல்கிறார் வந்தியதேவன். பொன்னியின் செல்வன் என்று இந்த கதைக்கு பெயர் வைத்திருந்தாலும், இக்கதையின் நாயகன் வந்தியத்தேவனே. வந்தியதேவனை சுற்றியே கதைக்களம் சுழல்கிறது. வந்தியதேவனை துடிப்பான இளைஞனாக காட்டியது கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. தஞ்சை செல்லும் வழியில் சோழ அரியணைக்கு எதிராக பெரிய பதவிகளில் உள்ளவர்கள் சூழ்ச்சியில் ஈடுபடுவதை வந்தியதேவன் அறிகிறான். அதனை அரசருக்கும், பழையறையில் இருக்கும் அவருடைய மகளான குந்தவை தேவியாருக்கும் தெரியபடுத்த விரைகிறான். சுந்தர சோழரை சந்திக்கும் வரையில் தான் சந்திக்கும் தடங்களை எல்லாம் எவ்வாறு சமாளிக்கிறான் எனபதை கல்கி தனது கற்பனை திறனால் அழகாக கூறியிருப்பார்.

இதனை தொடர்ந்து குந்தவையை சந்தித்து அவரிடம் ஓலையை கொடுக்கும் போது, குந்தவை ஒரு ஓலையை கொடுத்து இலங்கையில் இருக்கும் தன்னுடைய இளைய சகோதரரான அருள்மொழிவர்மனிடம் கொடுக்க சொல்கிறார். வந்தியத்தேவன் கடல் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அங்கிருந்து தான் கதையானது அடுத்த தளத்திற்கு செல்கிறது. வந்தியத்தேவன் பாண்டிய எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்து கொள்கிறான். சுந்தரசோழர், ஆதித்த கரிகாலர், அருள்மொழிவர்மன் இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் கொல்ல வேண்டும் என்று நினைக்கும் பாண்டியர்களின் சதி ஒரு பக்கம், நந்தினியின் சூழ்ச்சி ஒரு பக்கம், சோழ அரசர்களுக்கு விசுவாசமான முக்கிய பதவிகளில் அதிகாரத்தில் இருக்க கூடிய பழுவேட்டரையர்களின் சதி மறுபக்கம் என சோழ தேசமே வெடித்து சிதற தயாராக இருந்தது. இது எல்லாத்தையும் கடந்து வந்தியத்தேவன் அருள்மொழிவர்மனை இலங்கையில் பார்த்து ஓலையை கொடுக்கிறார். பழுவேட்டையர்களின் சதியால் அருள்மொழிவர்மனை கைது செய்யவரும் வீரர்களிடம் சிக்காமல் எவ்வாறு தப்பிக்கிறார்? எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிய சோழ இளவரசர் அருள்மொழிவர்மனையும், நம் கதாநாயகன் வந்தியதேவனையும் காப்பாற்றியது யார்? அவர்கள் மீண்டும் எவ்வாறு தஞ்சையை அடைந்தனர்? 

கன்னடராதித்தரின் மகனான மதுராந்தகதேவரை சுந்தர சோழருக்கு பின் அரியணை ஏற்றவேண்டும் என்றே பழுவேட்டரையர்கள் சதியில் ஈடுபட்டுள்ளனர். சுந்தர சோழருக்கு முன் பிறந்த கன்டராதித்தரின் மகன் மதுராந்தகருக்கே சோழ அரியணை உரியது என்பது அவர்களுடைய நிலைப்பாடு. அதற்கிடையில் நந்தினியின் சூழ்ச்சியால் கடம்பூர் கோட்டைக்கு செல்லும் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். 15 வயதிலே போர்க்களம் புகுந்து தோல்வியே காணாத அந்த மாவீரன் கடம்பூர் மாளிகையில் சதியால் வீழ்த்தப்படுகிறான். மறுமுனையில் நந்தினியின் உதவியால் தஞ்சை கோட்டைக்குள் நுழையும் பாண்டிய ஒற்றர்கள் சுந்தரசோழரை கொல்ல முயல்கின்றனர். அந்த கொலைமுயற்சியை ஊமை ராணி எனும் மந்தாகினி தன் உயிரை தியாகம் செய்து தஞ்சை அரசரை காப்பாற்றுகிறாள். சுந்தரசோழர் உயிரை ஊமைராணி ஏன் காப்பாற்றவேண்டும்?, இந்த ஊமைராணி யார்?

பாண்டியன் தலை கொண்ட மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணம், சுந்தர சோழருக்கு எதிரான கொலை முயற்சி, கடலில் மூழ்கிய பொன்னியின் செல்வரின் மீள்வருகை என மூன்று கதைகளங்களையும் சிறப்பாக தொய்வில்லாமல் நகர்த்தி தஞ்சையில் மீண்டும் கொண்டு வந்த ஆசிரியரின் சமயோசிதம் அற்புதமானது. ஆதித்த கரிகாலன் மரணமான நிலையில் ஆட்சி அதிகாரம் அருள்மொழிவர்மனிடம் வந்தது. ஆனால் அரியனை மீது ஆர்வம் இல்லாத பொன்னியின் செலவன் தனக்கான அரியணையை தன் சித்தப்பாவான மதுராந்தகதேவருக்கு வழங்கினார். மதுராந்தகதேவர் வாரிசு இல்லாமல் இறந்த பின் பின் அரியணை ஏறினார் அருள்மொழி வர்மன். இவருடைய காலத்தில் தான் சோழ தேசம் கடல் கடந்து சென்றது.

பக்கத்திற்கு பக்கம் திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. திரைப்படத்தில் பாரத்தவர்களின் மனநிலைக்கும், நாவலை வாசித்தவர்களின் மனநிலைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் காணமுடிந்தது. கல்கியின் எழுத்துக்களால் பெறும் அனுபவங்களை விட திரையில் பெறும் அனுபவங்கள் பெரிதல்ல. நாவலின் மற்றொரு சிறப்பு இதிலுள்ள உணர்வுகள். எல்லா உணர்வுகளையும் இந்த நாவலில் கல்கி சிறப்பாக கையாண்டுள்ளார். நட்பு, காதல், பகை, வீரம், தியாகம், துரோகம், போன்றவற்றை ரசிக்கும் விதத்திலும், படிக்கும் வாசகர்களுக்கு புரியும் வகையிலும் இந்த நாவலில் விளக்கியுள்ளார். கல்கி அவர்கள் இந்த நாவலை ஐந்து பாகங்களாக எழுதியுள்ளார். இது போன்ற அற்புதமான ஒரு வரலாற்று தொடரை மீண்டும் கல்கியே வந்தாலும் இயற்றுவது சற்றே கடினம் தான். காலாத்தால் அழியாத இவ்வாறான படைப்புக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்லவேண்டியது கட்டாயமாகும்.


Comments

  1. கல்கியின் படைப்புக்கள் அருமையானவை.

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்