நூற்றாண்டுகள் கடந்த யாழ்ப்பாணக் கோட்டை

இலங்கைத் தீவு நீண்ட நெடிய ஒரு வரலாற்றைக் கொண்ட நாடு. இராமாயண காலந்தொட்டு மிகப் பெரிய வரலாற்று சாட்சியங்களை சுமந்து நிற்கிறது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல மேற்குலக நாடுகளின் பார்வை ஈழத்தின் மீது விழுந்தது. வணிக, வர்த்தக தொடர்பு, இயற்கை துறைமுகம், ஆசிய நாடுளை கண்காணிக்க ஏதுவான கேந்திர அமைப்பு போன்ற முக்கியத்துவத்தால் போத்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய நாடுகளின் ஆதிக்கதிற்கும் உட்பட்டு வந்துள்ளது. இங்கு தமிழ், சிங்களம் என இரண்டு இன மக்கள் ஒன்றித்து வாழ்கின்றனர். அவ்வப்போது இவ்விரு இனங்களுக்குள்ளும் ஏற்படும் முரண் நிலையில் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கள் சாத்தியமாகியது. 400 ஆண்டுகளுக்கு மேல் மேற்குலக நாடுகளின் கட்டுபாட்டில் சிக்கித் தவித்தது ஈழத் திருநாடு. மேற்குலக நாடுகளின் நாடுகாண் பயணத்தின் விளைவாக இந்த ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமாகின. முதலாவதாக போர்த்துக்கீசர் 1505 இல் இலங்கையின் கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றினர். அவர்களால் கரையோர பிரதேசங்களை மட்டுமே கைப்பற்றமுடிந்தது. அதன்பின் 1658 வந்த ஒல்லாந்தர்களின் முக்கிய நோக்கம் தங்கள் மதத்தை பரப்புவதே. 1796 இல் இருந்து 1948 வரை இலங்கை ஆங்கிலேயர்களின் வசம் இருந்தது.

16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை வந்த போத்துகீசர் முதலில் தென்னிலங்கையை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தின் மீதும் கண் வைத்த சமயத்தில் 1542 இல் போர்த்துகேய மதகுரு மன்னாரில் 600 பேரை கிறிஸ்தவர்களாக மாற்றியதை அறிந்த யாழ்ப்பான அரசன் சங்கிலி செகராசசேகரன் (1ம் சங்கிலி) தனது படையுடன் சென்று மதகுருவையும் மதம் மாறிய 600 பேரையும் சிரச்சேதம் செய்தான். இதற்கு பழிவாங்கும் நோக்குடன் 1543 இல் முதற்தடவையாக போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தனர். இப்படைக்கு மாட்டின் அல்போன்சோ தே சௌதா தலைமை தாங்கினான். யாழ் மன்னனால் இப்படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. 1560 இல் இரண்டாம் தடவையாக கொன்ஸ்தாந்தீனு தே பிற்கன்சா எனும் தளபதி தலைமை வகித்தான். இவன் யாழ்ப்பாண அரசனுடன் உடன்படிக்கை செய்து படையெடுப்பை கைவிட்டான். மூன்றாம் தடைவ 1591 இல் படையெடுப்பு நிகழந்தது. இப்படையில் 1400 பறங்கிகளும் 3000 லாஸ்கொறிகளும் இருந்தனர். லாஸ்கொறி என்பது சிங்கள சுதேசிகள். இப்படையெடுப்பில் புவிசாரபண்டாரனை கொன்ற போர்த்துகேயர் எதிர்மன்ன சிங்கனை அரசனாக்கிவிட்டு வெளியேறினர். 1621 இல் சங்கிலியனுடன் ஏற்பட்ட மனகசப்பால் பிலிப் தே ஒலிவேரா காக்கை வன்னியனின் உதவியுடன் சங்கிலியனை கொன்று யாழ்ப்பாணத்தை தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான். இதுவரை காலமும் தமிழர்களால் ஆழப்பட்டுவந்த தமிழ் மண்ணில் முதல் தடவையாக அந்நிய ஆட்சி ஆரம்பித்தது.

பிலிப் தே ஒலிவேரா ஆரம்பத்தில் நல்லூரையே தலைநகராக கொண்டான். ஆனால் அடிமைத்தனத்தை விரும்பாத தமிழர்கள் கிளர்ச்சியில் ஈடுபட தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்ய விரும்பினான். அதற்காக அவன் தெரிவு செய்த இடமே தற்போது யாழ் கோட்டை அமைந்துள்ள இடம் ஆகும். இக்கோட்டையை அமைக்க பலமான கற்கள் தேவைப்பட்டது. அதற்காக நல்லுர் பெரிய கோவிலை இடித்து அதிலிருந்தே தேவையான கற்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் அது போதுமானதாக இருக்கவில்லை எனவே கோவில்கள், சைவர்களின் பெரிய வீடுகள் என்பனவும் இடிக்கப்பட்டது. 1625 இல் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 1629 இல் முடிவடைந்தது. எனினும் இக்கோட்டை தற்போதுள்ள வடிவத்தை அப்போது பெறவில்லை. போர்த்துகேயர் இக்கோட்டையை சதுர வடிவிலேயே அமைத்தனர். இக்கோட்டையிலேயே சகல அரச நிர்வாக நடவடிக்கைகளும் நடைபெற்றது. அதனால் இக் கோட்டையை மக்கள் “இராசவாசல்” என்று அழைத்தனர். 

ஓல்லாந்தர் 21 யூன் 1658 இல் யாழ்ப்பானக் கோட்டையை கைப்பற்றினர். இப்படைக்கு கொசமுறி வனகீன்ஸ் தலைமை வகித்தான். ஓல்லாந்தர் காலத்திலேயே கோட்டை மேலும் பலம் வாய்ததாக அமைக்கப்பட்டது. அத்துடன் தற்போது காணப்படுவது போல் ஐங்கோண வடிவிலும் அமைக்கப்பட்டது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒல்லாந்தர் பல கோட்டைகளை அமைத்துள்ளனர். ஆனால் அது எதுவும் யாழ்ப்பாணக் கோட்டையின் அழகிற்கும், பாதுகாப்பிற்கும், தொழிநுட்பத்திற்கும் ஈடாகவில்லை. இக்கோட்டை சகல வசதிகளும் உள்ளே இருக்குமாறு அமைக்கப்பட்டது. சிலவேளைகளில் கோட்டை எதிரிகளால் முற்றுகைக்கு உள்ளனால் சில மாதங்கள் தாக்குபிடிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1795 இல் மீண்டும் ஓரு படையெடுப்புக்கு உள்ளானது.

1795 செப்டம்பர் 28 ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடம் இருந்து யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்றினர். இதுவரை காலமும் கரையோர பிரதேசங்களில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்திவந்த ஆங்கிலேயர்கள் 1815 இல் முழு இலங்கையையும் தங்கள் நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தபின் சில முக்கிய நிகழ்வுகள் இக் கோட்டையில் நடைபெற்றது. 1897 இல் விக்டோரியா மகாராணியின் 60வது ஆட்சி நிறைவு கொண்டாடப்பட்டது. கிட்டதட்ட 350 ஆண்டுகளிற்கு பின் யாழ் கோட்டை 1948 மாசி 04ம் திகதி தனது அடிமை சங்கிலியை உடைத்து சுதந்திர காற்றை சுவாசித்தது. ஆங்கிலேய கொடி இறக்கப்பட்டு சுதந்திர இலங்கையின் சிங்கக் கொடி பறந்தது. சுதந்திரத்திற்கு பின் கோட்டையின் ஒரு பகுதி பொலிஸ் விடுதிகளாகவும், சிறைச்சாலையாகவும் பயன்பட்டது. குயின்ஸ் கவுஸ் அரச விருந்தினர், உயர் அதிகாரிகள் வந்து தங்கும் மாளிகையாக பயன்பட்டது. 

சுதந்திரத்திற்கு பின் நீண்டகாலமாக அமைதியாய் இருந்த யாழ்ப்பாணக் கோட்டை மீண்டுமொரு தடவை தன் அமைதியை இழந்து மீண்டும் யுத்தகோலம் பூண்டது. பல அந்நிய நாட்டவர்களின் எண்ணற்ற போர்களை கண்ட இந்த கோட்டை இம்முறை உள்நாட்டு கலவரத்தில் தன் சுயத்தை இழக்க ஆரம்பித்தது. விடுதலைபுலிகள் மற்றும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பமானதை அடுத்து இக்கோட்டை முற்றுகைக்கு உள்ளானது. 05 சித்திரை 1971 இல் தொடங்கி 2009 வரையான காலப்பகுதியில் விடுதலைபுலிகள் மற்றும் இலங்கை இராணுவம் மாறி மாறி கோட்டையை தம் வசப்படுத்தினார். யுத்த காலத்திலேயே கோட்டை மிகப்பெரிய சிதைவுகளுக்கு உட்பட்டது. 2009 ற்கு பின் கோட்டை இலங்கை அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.  இவ்வாறு 400 ஆண்டுகளாக பல யுத்தங்களுக்கும்இ அழிவுகளுக்கும் சாட்சியமாக நிற்கும் இக் கோட்டை 2009 ற்கு பின் ஒல்லாந்த அரசின் உதவியுடன் யுத்த காலத்தில் ஏற்பட்ட சிதைவுகள் சரி செய்யப்பட்டு புணரமைக்கப்பட்டது. இக்கோட்டை யாழ்குடா கடலை அண்மித்து அமைந்துள்ளது. இது இப்பொழுதும் நட்சத்திர வடிவத்திலேயே உள்ளது. இந்த வடிவமே இதன் தனிச்சிறப்பிற்கு காரணம். 

இப்போது யாழ்ப்பாணக் கோட்டை வடக்கின் முக்கிய சுற்றுலா தளமாக காணப்படுகிறது. தற்போது கோட்டையை சுற்றி பண்னை எனும் பொழுதை கழிக்க கூடிய இடமும் உருவாக்கப்பட்டு வருகிறது. கோட்டையும் அதனை சார்ந்த சூழலும் கண்னை கவரும் வகையிலும், குழந்தைகள் மகிழ்வுடன் பொழுதை கழிக்ககூடிய வகையிலும் உருவாகி வருகிறது. யாழ் கோட்டை இதுவரை என்னதான் பெரும் வீர வரலாற்றை சுமந்திருந்தாலும் தற்போது அதன் மகத்துவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தகூடிய செயற்பாடுகளே இளந் தலைமுறையினால் நடைபெற்று வருவது வருந்ததக்க விடயமாகும். பொறுப்பான தலைமுறையாக நாம் தான் எம் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்