யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக பல அரிய நூல்களுடன் இயங்கி வந்த யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையானது. யாழ் நூலகம் ஓரே நாளில் எரிந்துவிடவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மூன்று நாட்களும் நூலகம் மட்டும் எரியவில்லை. ஓட்டுமொத்த யாழ் நகரமும் சிதைந்து போனது காடையர்களின் தாக்குதாலால். எரிந்தது நூலகம் மட்டுமல்ல தமிழ் வரலாறுமே தான். உலகின் பல நாடுகள் பிறக்கும் முன்னமே தோன்றிய மொழி தமிழ். உலகம் முழுவதிலும் இருந்து தேடி தேடி கொண்டு வந்து சேர்த்த பல நூல்கள், ஓலைச்சுவடிகள் என ஆயிரக் கணக்கான ஆவணங்கள் யாழ் நூலகத்தில் இருந்தன. இன்னும் சொல்வதென்றால் நூலகம் எரிக்கபட்ட சமயத்தில் நூல்களை விட ஓலைச்சுவடிகளே அனேகம் இருந்துள்ளது. நூல்கள் பிறக்க முதலே ஓலைச்சுவடிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சற்று சிந்தித்தால் விளங்கும் அழிக்கபட்டது நூற்றாண்டுகளாக சேகரித்த வரலாறு மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகள் முன்னம் சேகரித்த வரலாறுகள் என்று. பல நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் பலர் வந்து பயன்பெற்று சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்களுக்கு தெரிந்த முக்கியதுவம் இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த காடையர்களால் யாழ் நூலகமும், யாழ்ப்பாணமும் என்ன பாடுபட்டது என்பதை இங்கு பார்ப்போம்.
யாழ்ப்பாண நகரத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தூரத்தில் காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் அம்மன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலிற்கு அருகில், மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சுமார் 2000 மக்கள் வரையில் கலந்து கொண்டிருந்த இடத்தில் அப்போதைய மேஜர் விசுவநாதன் அவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நான்கு போலீசார் இனம் தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தால் பீதியடைந்த மக்கள் நாலா பக்கமும் ஓடத் தொடங்கினர். துப்பாக்கி சூடு நடந்த சில நிமிடங்களில் அங்கு வந்த பொலிசார் அங்கு நின்றிருந்த மக்கள் மீது தாக்கத் தொடங்கினர். எங்கிருந்தோ வந்த குண்டர்களும் அந்த வீதியால் சென்றவர்களையும் தாக்கினர். அருகில் இருந்த நாச்சிமார் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த சொத்துக்களை கொள்ளையடித்தது மட்டுமின்றி கோவிலுக்கும் தீ வைத்து சேதப்படுத்தினர். யாழ் நகரம் இங்கிருந்து தான் எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்த வீடுகள், கடைகள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. வீட்டிற்குள் இருந்தவர்களையும் கதவுகளை உடைத்து தாக்கினர்கள். அன்றிரவு அந்த பிரதேசத்தில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் ரூபாய் மதிப்பிடத்தக்க பொருட்கள், கட்டிடங்கள், வாகனங்கள் என்பன எரிந்து சாம்பல் ஆயின.
நாச்சிமார் கோவிலின் அருகில் வன்செயல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அதேவேளை யாழ் நகர் எங்கும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாண பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கடைகள் அடித்து உடைக்கப்பட்டது. சந்தையில் இருந்த வியாபரிகள் அங்கு வந்த காடையார்கள் கொண்டு வந்த துப்பாக்கி பிடிகளால் தாக்கப்பட்டனர். யாழ் பஸ் நிலையம் அல்லோல கல்லோலபட்டது. பிரயாணிகள் பயத்துடன் செய்வதறியாது மறைவிடங்களை தேடி ஓடினர். பேரூந்து கண்ணாடிகள் உடைக்கபட்டு சேதப்படுத்தப்பட்டது. காடையர்களின் தாக்குதல்களை அறிந்து யாழ் நகரின் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களில் இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பயத்துடன் வெளியேறினர். சிலர் விழுந்தடித்து வீதிகளில் ஓடிச் சென்றனர். தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான பஸ்கள், மினிபஸ்க்கள் எதுவும் இருக்கவில்லை. தூரத்து இடங்களில் இருந்து வந்தவர்கள் தியேட்டர்களை விட்டு வெளியேறப் பயந்து தியேட்டர்களிலேயே தங்கி விட்டனர். வெளியேறியவர்களில் பலர் காரணமின்றி தாக்கப்பட்டனர். பூபாலசிங்கம் புத்தகநிலையத்தில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களுடன் அந்த கடை எரிந்தது. அந்த கடையுடன் சேர்ந்து அருகில் இருந்த பல கடைகளும் சாம்பலாகின. தீயை அணைக்க சென்றவர்களை காடையர் கூட்டம் தாக்கி தடுத்து நிறுத்தியது. தங்கள் சொத்துக்கள் அழிந்து சாம்பலாவதை அவர்கள் கண் முன்னே கண்டனர்.
மதுபானக் கடைகளுக்குள் புகுந்த அவர்கள் அங்குள்ள மதுக்களை அருந்தி தங்கள் வெறியை அதிகரித்தனர். அதன்பின்பு அருகில் இருந்த புடைவை கடைகள், அச்சகங்கள் என்பவற்றை எல்லாம் தீ மூட்டினர். கடைகள் எரியும் தீச்சுவாலை விண்னைத் தொட்டது. யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வே.யோகேஸ்வரனின் வீட்டிற்குள் புகுந்த இந்த கொலைகார கூட்டம் வீட்டில் இருந்த அனைத்தையும் கொளுத்தி சாம்பலாக்கியது. நல்ல வேளையாக யோகேஸ்வரன் அவரது குடும்பத்துடன் தப்பி சென்றுவிட்டார். வெ.யோகேஸ்வரனின் வீட்டை எரித்து முடித்துவிட்டு அதன் பின் அந்த காடையர் கூட்டம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்கு சென்று தீ வைத்தனர். அலுவலகத்தில் இருந்த தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் முதலானோரின் படங்களை கழற்றி எடுத்து வந்து நடுவீதியில் இட்டு உடைத்து பெற்றோல் ஊற்றி எரித்தனர். அன்று இரவு சுன்னாகத்திலும் சில கடைகள் கடை உடைப்புக்கும், சூறையாடலுக்கும், தீ வைப்புக்கும் உட்பட்டன. இந்த கடைகள் சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலீஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொடூரமானவை. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டதும் அதே இரவு தான். ஏறத்தாழ 97 000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெற முடியாத அரிய நூல்கள் பல எரிந்து போயின. யாழ் நூல் நிலையம் பல ஆண்டுகளாக பல நாடுகளில் இருந்து தனித்துவமான ஓலைசுவடிகள் என கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து 1933 இல் சிறிய அளவில் கட்டி எழுப்பப்பட்டது. அதனை சில மணித்தியாலங்களில் எரித்து முடித்தனர். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு சில மக்களின் மனநிலையைப் புரிவதற்கு இந்தச் சம்பவம் தக்க சான்றாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியாவின் மீது குண்டுகளை வீசச் சென்ற விமானப்படை விமானிகளுக்கு ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு குண்டுகளை வீசி அழித்து விடக்கூடாது என ஹிட்லர் உத்தரவிட்டான். அதேபோல ஜெர்மனியின் ஹைடல்பேர்க் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதலை தவிர்க்கும்படி பிரித்தானியா தனது விமானப்படைக்குப் பணிபுரை வழங்கியது. அறிவுத் தளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பகைவர்களுக்கு கூட இருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட காடையர்கள் அங்கிருந்த நூல்நிலையத்தை கூட விட்டு வைக்கவில்லை. அன்று இரவு 10 மணிபோல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள், நூலகக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் புரிந்தனர். ஆயிரக்கணக்கான நூல்களுக்குப் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அழித்தனர். நூல் நிலையம் அழிக்கப்பட்டது யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரிடியாகும். மதிப்பிற்குரிய தாவீது அடிகள் நூல்நிலையம் எரிகிறது என்ற தகவல் அறிந்ததும் அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவர் போன்ற அறிஞர்களுக்கு தான் தெரியும் எரிந்தது சாதாரண நூல்கள் அல்ல. பல லட்சம் உயிர்களுக்கு சமம் என்று. எரிந்த மிகுதியில் கிடைத்த எச்சங்களை கொண்டு யாழ் நூலகம் மீண்டும் மெதுவாக கட்டியமைக்கப்பட்டது. அன்று நெருப்பில் இருந்து எஞ்சிய நூல்களையே வியந்து பார்த்து கொண்டிருக்கிறோம் இன்னும் அந்த 97000 நூல்களும் இருந்திருந்தால் உலகின் பல விடை தெரியாத மர்மங்களுக்கு விடை தெரிந்திருக்கும்.
அதே தினம் இரவு ஈழநாடு பத்திரிகை அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. தங்கராசா அவர்களினால் 23 வருடங்களாக நடாத்தப்பட்டு வந்தது. கொழும்புக்கு வெளியே அச்சிடப்படும் ஒரே தினசரிப் பத்திரிகை ஆகும். அதுவும் அன்றிரவு முற்றாக எரிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி பிரதான வீதியில் பெரியார்களின் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. கடைகளுக்கு தீவைத்துக் கொழுத்திய அந்த காடையர்கள் உலகத்திற்கு எப்படி வாழ வேண்டும் என சொல்லிக் கொடுத்த திருவள்ளுவரின் தலையை உடைத்தெறிந்தனர். வயதான மூதாட்டி ஓளவைப்பாட்டியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஓளவையாரின் மூக்கை உடைத்தனர். ஏடு தாங்கிய அவரின் கைகயையும் அவர்கள் அடித்து உடைத்தனர். பஸ் நிலையத்திற்கு முன்பாக சோமசுந்தர புலவரின் சிலை அமைந்திருந்தது. அவரின் தலையை கழுத்துடன் உடைத்தனர். சோமசுந்தரப் புலவரின் வலதுகை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டது. உலகிற்கு அமைதியை எடுத்து சொல்லிய அஹிம்சாவாதியான மகாத்மா காந்தியின் ஒரு காலை அந்த காடையர்கள் அடித்து உடைத்தனர். கொள்ளைகளும், தீ வைப்புக்களும் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் யாழ்நகரில் பரவலாக நடைபெற்றது. பின் இராணுவத்தின் தலையீட்டினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நிலை சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் ஆங்காங்கே சில தாக்குதல்களும், கொள்ளைகளும் நடைபெற்ற வண்ணமே இருந்தன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் மூன்றாம் திகதிக்குரிய ‘வீரகேசரி’ பத்திரிகைப் பிரதிகளும் வந்தன. யாழ் நகரில் நடைபெற்ற அட்டூழியங்களைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் அந்தப் பிரதிகள் தாங்கி வந்தன. வழமையிலும் பார்க்கக் கூடுதலான பிரதிகள் அன்று அனுப்பப்பட்டன. அப்பிரதிகள் யாவும் அன்று இரவு அனுராதபுரத்தில் வைத்து இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அவை மக்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறாக ஒரு வார காலத்திற்கு மேல் யாழ்ப்பாணம் முழுவதும் கலவர பூமியாகவே இருந்தது. பல லட்சம் சொத்துக்கள் சேதமாக்கப்ட்டன. பல வியாபாரிகள் தங்கள் கடைகள், உடைமைகள் என சகலதையும் இழந்து அநாதரவாக இருந்தனர். இவை அனைத்துக்கும் மேலாக தற்போதுள்ள தலைமுறைக்கு தெரியாத பல பொக்கிசங்களை வைத்திருந்த யாழ் நூலகம் சாம்பலாக்கபட்டது. இன்றளவும் யாழ்ப்பாண மக்கள் யாழ் நூலகத்தை ஒரு கோவிலாகவே பார்க்கின்றனர். நூலகத்திற்குள் செல்லும் முன் பாதணிகளை வெளியே கழற்றி விட்டே செல்கின்றனர். அந்தளவு நூலகம் அவர்களின் வாழ்வியலோடு இணைந்திருக்கிறது. நூலக எரிப்பு எதேட்சயாக நடைபெற்ற நிகழ்வல்ல. முறையான திட்டமிடலின் பின்னே நடந்தேறியது இந்த கொடூரம். இதுநாள் வரை இந்த குற்றங்களிற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. பலவிதமான விசாரணைகள் நடைபெற்றும் குற்றவாளிகள் இவர்கள் தான் என தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சில முக்கிய தலைவர்கள் யாழ் நூலக எரிப்பிற்கு தாங்கள் தான் பொறுப்பு என வெளிப்படையாகவே கூறியிருந்தனர். இவ்வாறு ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாது என்பது நிச்சயமல்ல. அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் நாம் எவ்வாறு செயற்படபோகிறோம்?
மிகவும் அருமை
ReplyDeleteவாசிக்கும் போது கண்ணுக்கு முன்னால் நடக்கிறது போல இருக்கிறது🥺🙏
ReplyDeleteWeldone bro
ReplyDeleteமறுக்கப்பட்ட மறுக்கப்பட்ட உண்மை 💫 எரிந்தது நூலகமல்ல தமிழரின் தாயகம்🙏
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteGood work
ReplyDeleteGood 👍 job
ReplyDeleteGreat 👍
ReplyDelete